சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை, தமிழக அரசின், 'பேம் டி.என்.' நிறுவனம் செய்கிறது. இது, பெரிய நிறுவனங்களுக்கு தொழில் துவங்க உதவும். 'வழிகாட்டி' நிறுவனம் போல், தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ், 'பேம் டி.என்' நிறுவனம் செயல்படுகிறது.தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், பெரிய நிறுவனங்கள் தொழில் துவங்க, பல துறைகளின் ஒற்றை சாளர அனுமதியை பெற்றுத் தருவது உள்ளிட்ட பணிகளை செய்கிறது.இதே பணியை, சிறு நிறுவனங்களுக்கு, பேம் டி.என்., செய்கிறது.தொழில்முனைவோர்கள் கூறியதாவது:பேம் டி.என்., மேலாண் இயக்குனராக, தொழில் வணிக ஆணையர் இருந்தாலும், அதை நிர்வகிப்பவர்களாக ஆணையரக அதிகாரிகள் தான் உள்ளனர்.தொழில் வணிக ஆணையரகத்தின் ஒரு பிரிவாக பேம் டி.என்., உள்ளது. இதற்கு தனி உயரதிகாரியை நியமித்து, தன்னாட்சி அதிகாரத்துடன் தனி நிறுவனம் போல் செயல்பட அனுமதித்தால், திட்டங்கள் விரைந்து செயல்பாட்டிற்கு வரும்.இதனால், சிறு நிறுவனங்களும் பயன்பெறும். தற்போது பேம் டி.என்., சம்பந்தப்பட்ட எந்த பணிகளையும் மேலாண் இயக்குனராக உள்ள ஆணையரின் கவனத்திற்கு விரைந்து எடுத்து செல்வதில்லை. இதனால் திட்டங்களை செயல்படுத்த தாமதமாகிறது.உதாரணமாக, அரசு, சிறு தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்து, மதிப்பெண் வழங்கும் திட்டத்தை பேம் டி.என்., வாயிலாக துவக்க முடிவு செய்தது.நல்ல மதிப்பெண் பெறும் நிறுவனங்களுக்கு, வங்கிகளில் அதிக கடன் கிடைக்க பரிந்துரை செய்யப்படும். இத்திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.இதேபோல் பல திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.