| ADDED : ஆக 08, 2024 12:55 AM
புதுடில்லி:புதிய சேவை தர நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கான பேச்சுக்கே இடமில்லை என, 'டிராய்' எனும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் புதிய சேவை தர நெறிமுறைகளை டிராய் வெளியிட்டது. தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு நிறுவனத்தின் சேவை செயலிழந்திருந்தால், தனது வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட தர அளவுகோல்களை பூர்த்தி செய்யாதபட்சத்தில், செலுத்த வேண்டிய அபராதத் தொகை, முன்பிருந்த 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்தது.இதற்கு தொலைதொடர்பு நிறுவனங்களின் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், முழுமையான ஆலோசனை மற்றும் உரிய பரிசீலனைக்கு பிறகே, இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, டிராய் தலைவர் அனில் குமார் லஹோட்டி தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் பெற வேண்டிய மற்றும் சேவை வழங்குனர்கள் வழங்க வேண்டிய சேவையின் தரத்தை கருத்தில்கொண்டே, இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.