| ADDED : ஜூன் 20, 2024 01:26 AM
புதுடில்லி,:வேலைவாய்ப்பின்மை குறித்த தரவுகளை, மாதந்தோறும் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டுகளை மாற்றியமைக்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:வேலைவாய்ப்பின்மை குறித்த தரவுகளை ஒவ்வொரு மாதமும் வெளியிட அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும், கிராமப்புற வேலைவாய்ப்பு குறித்த தரவுகளை காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடவும் ஆலோசித்து வருகிறது.இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகளின் நம்பகத்தன்மை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து எழுப்பப்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில், இந்த தரவுகளை மாதந்தோறும் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுமட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டுகளை மாற்றி அமைக்கவும், அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நுகர்வோர் விலை பணவீக்கத்தை கணக்கிடு வதற்கான அடிப்படை ஆண்டாக, நடப்பு 2024ம் ஆண்டை நிர்ணயிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஜி.டி.பி.,யை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.கடந்த 2022 - 23ம் ஆண்டில் நடத்தப்பட்ட, குடும்பங்களின் நுகர்வு செலவு கணக்கெடுப்பு முடிவுகளை, மத்திய புள்ளியியல் அமைச்சகம் இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டது. இந்நிலையில், இது குறித்து மேலும் துல்லியமான தகவல்களை திரட்டும் நோக்கில், அமைச்சகம் தற்போது அடுத்தடுத்து இரண்டு கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறது. விரைவில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.