மும்பை : ரிசர்வ் வங்கி, பேங்க் ஆப் இங்கிலாந்தில் வைத்திருக்கும் தன் தங்க இருப்பிலிருந்து, 100 டன் தங்கத்தை, இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வந்துள்ளது. வரும் மாதங்களில், இன்னும் கூடுதல் டன் தங்கத்தை கொண்டு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல நாடுகளின் மத்திய வங்கிகள், அவற்றின் தங்கத்தை 'பேங்க் ஆப் இங்கிலாந்து' எனும் பிரிட்டனின் மத்திய வங்கியில் வைத்து பாதுகாத்து வருகின்றன; இதற்கான சேவை கட்டணங்களையும் செலுத்தி வருகின்றன. ரிசர்வ் வங்கியும் தன் தங்க இருப்பில் ஒரு பகுதியை பிரிட்டனில் வைத்துள்ளது. கையிருப்பு
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 822.10 டன். இதில், 413.80 டன் வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுஇருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருப்பு அதிகரித்து வருவதால், குறிப்பிட்ட அளவிலான தங்கத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. 100 டன் என்பது, வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் தங்க கையிருப்பில் நான்கில் ஒரு பங்கு. இவ்வளவு தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவது என்பது, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை கொண்டது. இதை வெற்றிகரமாக நிறைவேற்ற, பல மாத திட்டமிடல் தேவை. மேலும் நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு அவசியமாகும். வரி விலக்கு
இந்நிலையில், இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிரத்யேக விமானம் வாயிலாக தங்கம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு, ரிசர்வ் வங்கி, மத்திய அரசிடமிருந்து சுங்க வரி விலக்கு பெற்றுள்ளது. எனினும், மாநிலங்களுடன் பகிரப்படுவது என்பதால், ஐ.ஜி.எஸ்.டி., கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டுள்ளது.