உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

ஆறுதல் தந்த ஏற்றம்

வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் உயர்வுடன் நிறைவு செய்தன. உலகளாவிய சந்தை போக்குகளின் தொடர்ச்சியாக வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறுவது, அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பு குறித்த தெளிவான நிலை ஏற்படாதது ஆகியவை காரணமாக, சற்று நேரத்தில் சந்தை குறியீடுகள் சரிந்து,ஊசலாட்டத்துக்கு வழிவகுத்தன. மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட இருந்த கூடுதல் வரியை, ஒரு மாதம் தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது; சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு கீழே குறைந்தது போன்ற செய்திகளால் உற்சாகமடைந்த முதலீட்டாளர்கள், ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, டி.சி.எஸ்., உட்பட முன்னணி நிறுவன பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால், பிற்பகல் வர்த்தகத்தில் சந்தை குறியீடுகள் அதிக உயர்வுடன் நிறைவு செய்தன. பெருநிறுவனங்களின் சந்தை மதிப்பு 6.70 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும்; நடுத்தர நிறுவனங்களின் சந்தை மதிப்பு 2.49 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும்; சிறு நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1.74 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் உயர்வு கண்டன.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 2,377 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.52 சதவீதம் உயர்ந்து, 69.66 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்து, 87.12 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !