உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

திருப்பூர்:தமிழகம், கடந்த நிதியாண்டில், 59,655 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி ரகங்களை, உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்துள்ளது மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் வாயிலாக தெரியவந்து உள்ளது. நம் நாட்டில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள், உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆயத்த ஆடை, பருத்தி நுாலிழை, கைத்தறி, செயற்கை நுாலிழை, துணி ரகங்களை உள்ளடக்கிய நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. குஜராத் இரண்டாமிடம், மஹாராஷ்டிரா மூன்றாமிடம், ஹரியானா நான்காமிடம், உ.பி., ஐந்தாமிடத்தில் உள்ளன.நம் நாட்டிலிருந்து, 2023 - 24ம் நிதியாண்டில், மொத்தம் 2.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி ரகங்கள், உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. தமிழகம், 59,655 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி ரகங்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்து, முதலிடத்தில் உள்ளது.குஜராத், 44,106 கோடி ரூபாய்க்கும்; மஹாராஷ்டிரா, 33,122 கோடி ரூபாய்; ஹரியானா, 30,200 கோடி ரூபாய்; உத்தர பிரதேசம் 28,300 கோடி ரூபாய்க்கு ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்துள்ளன.கடந்த நிதியாண்டில், மொத்தம் 1.21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடை ரகங்கள் உலக சந்தைக்கு ஏற்றுமதியானது. ஆயத்த ஆடை ஏற்றுமதியிலும், தமிழகமே முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2023 - 24 நிதியாண்டில், 39,117 கோடி ரூபாயாக உள்ளது.நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு, 20.78 சதவீதமாகவும்; ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 32.32 சதவீதமாகவும் உள்ளன.ஏற்றுமதியில், மிக முக்கிய பங்கு வகிக்கும் ஜவுளித்துறை மீது, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொலைநோக்குப்பார்வையில், புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதன் வாயிலாக, மாநில ஜவுளி ஏற்றுமதியை மேலும் வளர்ச்சி பெறச் செய்ய முடியும் என்பது ஜவுளித்துறையினரின் எதிர்பார்ப்பு.இந்தியாவின் ஒட்டுமொத்த பொருட்கள் ஏற்றுமதியில், குஜராத் முதலிடம், மஹாராஷ்டிரா இரண்டாமிடம், தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ