| ADDED : மே 29, 2024 01:33 AM
புதுடில்லி: டாடா, கூகுள் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்துக்கு இணையாக, டிஜிட்டல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்த, அதானி குழுமம் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது.அதன் வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், மின்னணு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பேமென்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட துறைகளில் நுழைய உள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.'அதானி ஒன்' எனும் நுகர்வோர் செயலி ஒன்றை ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக யு.பி.ஐ., செயலிக்கான உரிமம் பெறுவதற்காக பேச்சு நடத்தி வருகிறது.அத்துடன் முன்பு அறிவித்திருந்த 'அதானி கிரெடிட் கார்டு' திட்டத்தை செயல்படுத்த, வங்கிகளுடன் இறுதிக் கட்ட பேச்சில் ஈடுபட்டு வருகிறது. இவைதவிர, டிஜிட்டல் வர்த்தகத்திற்கான அரசின் 'ஓ.என்.டி.சி.,' எனும் பொது வர்த்தக தளத்தை பயன்படுத்தி, ஆன்லைன் ஷாப்பிங் வசதியை வழங்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இத்திட்டங்கள் இறுதி செய்யப்படும் நிலையில், இந்த சேவைகள் அனைத்தும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'அதானி ஒன்' நுகர்வோர் ஆப் வாயிலாக வழங்கப்படும்.ஆரம்பகட்டமாக அதானி குழுமத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் அதன் விமான நிலையங்களில் பயணிக்கும் பயணியர்களுக்கு இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் 16,000 கோடி
நிதி திரட்ட ஒப்புதல்'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் இயக்குனர் குழு அந்நிறுவனம் 16,600 கோடி ரூபாய் நிதி திரட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக, இந்த நிதி திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24ம் தேதி நடைபெறவுள்ள நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் ஒப்புதல் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு பிறகு, நிதி திரட்டப்பட உள்ளது.