உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / விளைபொருளுக்கு ஏற்ப தொழில் பூங்கா: மாவட்டம் தோறும் அமைக்கிறது அரசு

விளைபொருளுக்கு ஏற்ப தொழில் பூங்கா: மாவட்டம் தோறும் அமைக்கிறது அரசு

சென்னை: விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைக்கவும், அதிக விளைச்சலின் போது விலை குறையாமல் இருக்கவும், மாவட்டம் தோறும் விளைபொருளுக்கு ஏற்ற தொழில் பூங்காவை அமைக்க, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் முருங்கை விளைச்சல் அதிகம் உள்ளது. பலர் முருங்கை காய், முருங்கை கீரை ஆகியவற்றை மட்டும் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். முருங்கை இலை, விதை, பூ என, முருங்கையில் அதிக ஊட்டச்சத்துகள் கொண்டவை இருப்பதால், வெளிநாடுகளில் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.தமிழக சிறு, குறு நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும், உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிறுவனம், கரூரில் முருங்கை தொழில் பூங்கா அமைத்து வருகிறது. அந்த பூங்காவில் உள்ள தொழில்மனைகள், முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இவற்றின் வாயிலாக, முருங்கை பயிரிடும் விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் வருவாய் கிடைக்கும்.ஈரோடில் மஞ்சள்; கடலுாரில் முந்திரி, பலா; பெரம்பலுாரில் மக்காச்சோளம் என, ஒவ்வொரு மாவட்டத்திலும் காய்கறிகள், கீரை வகைகள் என அதிகம் விளைகின்றன. ஒரு விளைபொருளின் விளைச்சல் அதிகரிக்கும் போது, விலை வீழ்ச்சி அடைகிறது. இதனால், போதிய வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து, சிறு, குறு நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தக்காளி உள்ளிட்ட பல வகை காய்கறிகளும்; மா, பலா, வாழை என, பழ வகைகளும் தமிழகத்தில் அதிகம் விளைகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன விளைபொருள் அதிகம் உள்ளது என கண்டறியப்பட்டு, அதற்கு ஏற்ப தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு, தொழில் துவங்கும் சிறு நிறுவனங்கள் பயன்பெற, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்களை உள்ளடக்கிய பொது வசதி மையம் ஏற்படுத்தி தரப்படும். இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு உரிய வருவாயும், உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன விளைபொருட்கள் அதிகம் கிடைக்கின்றன; அவற்றுக்கான சந்தை வாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை