புதுடில்லி : கடந்த நிதியாண்டில், ெவளி நாடுகளுடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தகத்தில், முதல் 10 நாடுகளில் 9 நாடுகளிடையே வர்த்தக பற்றாக்குறையை பதிவு செய்து உள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன.கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் கொரியா உள்ளிட்ட முதல் 10 நாடுகளில், 9 நாடுகளுடனான வர்த்தக பற்றாக்குறை எனப்படும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு இடையிலான வித்தியாசத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2022 - 23ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சீனா, ரஷ்யா, கொரியா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ரஷ்யா, இந்தோனேஷியா மற்றும் ஈராக் உடனான வர்த்தக இடைவெளி குறைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த நிதியாண்டின் இருவழி வர்த்தகத்தில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, 9.83 லட்சம் கோடி ரூபாயுடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளராக சீனா உருவெடுத்துள்ளது. அமெரிக்கா உடனான இருவழி வர்த்தகம் சற்று குறைந்து, கடந்த நிதியாண்டில் 9-.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய நிதியாண்டுகளான 2021 - 22 மற்றும் 2022 - 23ம் நிதியாண்டுகளில், இந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நாடாக அமெரிக்கா இருந்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கொரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய முக்கிய நான்கு நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுஉள்ளது. கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த வர்த்தக பற்றாக்குறை, 19.78 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில், 21.99 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.