வர்த்தக துளிகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 'கார்தேக்கோ' விரிவாக்கம்
ராஜஸ்தானைச் சேர்ந்த வாகன தொழில்நுட்பம் மற்றும் நிதி தீர்வுகள் வழங்குனரான 'கார்தேக்கோ' குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் நுழைந்துள்ளது. இதற்காக அந்நாட்டின் 'ராயா ஹோல்டிங்ஸ்' நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.வரும் 2030ம் ஆண்டுக்குள் நிலையான வாகன போக்குவரத்து முறை மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை அடைய, திட்டமிட்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்சின் முயற்சிக்கு உதவும் வகையில், நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளதாக கார்தேக்கோ தெரிவித்துள்ளது. போலந்து
:நெவோமோ - டெக்ஸ்மாகோ கூட்டு
கோல்கட்டாவைச் சேர்ந்த 'டெக்ஸ்மாகோ ரயில் அண்டு இன்ஜினியரிங்' நிறுவனம், அதிவேக ரயில் தொழில்நுட்பங்களை உருவாக்க, போலந்தைச் சேர்ந்த 'நெவோமோ' நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. நெவோமோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ரயில் தொழில்நுட்பத்தை இணைந்து மேம்படுத்தி, செயல்திறன் மற்றும் வேகத்தை அதிகரிக்கும் விதமாக, அதை தற்போதுள்ள ரயில் உள்கட்டமைப்போடு ஒருங்கிணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு மற்றும் மேலாண்மை பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல்; உலகளவில் ரயில் பயணங்களில் புரட்சியை ஏற்படுத்த, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என, இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. நெதர்லாந்து
அக்சோ நோபல் விற்பனை
பெயின்ட் தயாரிப்பாளரான 'அக்சோ நோபல் இந்தியா' நிறுவனத்தின் பவுடர் கோட்டிங் வணிகத்தை, அதன் தாய் நிறுவனமான நெதர்லாந்தின் 'அக்சோ நோபல் என்.வி.,' நிறுவனம் 2,073 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. மேலும், அதன் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தையும் 70 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. இவற்றை வாங்க விருப்பம் தெரிவித்து, அக்சோ நோபல் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 2,143 கோடி ரூபாய்க்கு நடைபெற உள்ள இந்த வர்த்தகத்தில், அலங்கார பெயின்ட்களுக்கான அறிவுசார் சொத்துக்களின் விற்பனையும் அடங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பரிவர்த்தனைகள், அக்சோ நோபல் இந்தியா பங்குதாரர்கள் மற்றும் அக்சோ நோபல் என்.வி., நிறுவனத்தின் மேற்பார்வை குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது.