சென்னை:ஜெர்மனியில் முதல்வர் சுற்றுப்பயணத்தின்போது 26 நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெர்மனியில் தமிழக தொழில்துறை ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில், ஜெர்மனி மட்டுமின்றி பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்றன. தமிழகத்தில் தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்யும் வகையிலும், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக, தமிழகத்தில், 9,070 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். முதல்வரின் சுற்றுப்பயணத்தில், ஏற்கனவே, நார் பிரெம்ஸ் நிறுவனம் 2,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,500 பேருக்கு வேலை, நோர்டெக்ஸ் குழுமம் 1,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,500 பேருக்கு வேலை, ஈ.பி.எம்., பாப்ஸ்ட் 201 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 250 நபர்களுக்கு வேலை வழங்கும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. போலந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெல்லா ஹைஜீன் திண்டுக்கல் மாவட்டத்தில் அதன் நவீன சுகாதார பொருட்கள் உற்பத்தி வசதியை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளது.ஜெர்மனியின் விட்சென்மேன் குழுமம், தமிழகத்தில் ஆட்டோமொடிவ் மற்றும் தொழில் துறை பயன்பாடுகளுக்கான உற்பத்தியை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. வென்சிஸ் எனர்ஜி ஏஜி நிறுவனம் தமிழகத்தில் காற்றாலை பாகங்கள் உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இவ்வாறு, முதல்வரின் ஜெர்மனி சுற்றுப்பயணம் வாயிலாக மொத்தமாக 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. திரட்டப்படும் முதலீடுகள் 7,020 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக்க ஒப்பந்தங்கள் தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பல நிறுவனங்கள், மீண்டும் முதலீடுகளை செய்து விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்கும் முன்வந்துள்ளன. வென்சிஸ் எனர்ஜி நிறுவனம் 1,068 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,238 பேருக்கு வேலை, பெல்லா பிரமீயர் ஹேப்பி ஹைஜீன் 300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 200 பேருக்கு வேலை, ஜெர்ரென்க்னெக்ட் இந்தியா 250 கோடி ரூபாய் முதலீடு 400 பேருக்கு வேலை, பல்ஸ் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 500 பேருக்கு வேலை, வின்சென்மேன் இந்தியா நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 450 நபர்களுக்கு வேலை, மாஷ் எனர்ஜி நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலைவாயப்பு வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளன.