மருத்துவ காப்பீடு தேவை; 38 சதவீதம் அதிகரிப்பு; ஜி.எஸ்.டி., ரத்து காரணம்
புதுடில்லி: மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கியதையடுத்து, இவற்றின் தேவை 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'பாலிசிபஜார்' நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.மத்திய அரசு தனிநபர் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாக குறைத்தது. கடந்த செப்., 22ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது. இதனால், அதிக மதிப்பு கொண்ட மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கான தேவை 38 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜி.எஸ்.டி., விலக்குக்கு பின், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பை விட முழுமையான பாதுகாப்பை விரும்புவதால், சராசரி காப்பீடு தொகை, 13 லட்சத்தில் இருந்து 18 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில், 45 சதவீத வாடிக்கையாளர்கள் 15 - 25 லட்சம் ரூபாய் வரம்புக்குள் காப்பீடுகளை தேர்வு செய்கின்றனர்.மாநகரங்கள் மட்டுமல்லாது இரண்டாம் கட்ட நகரங்களிலும், குறைந்த மதிப்பு காப்பீடுகளின் மீதான விருப்பம் குறைந்து, 15 - 25 லட்சம் ரூபாய் காப்பீடுகளை தேர்வு செய்பவர்களின் பங்கு 48.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. 61 - 75 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் அதிக மதிப்பிலான காப்பீடுகளை தேர்ந்தெடுப்பது 11.54 சதவீதம் அதிகரித்துள்ளது.