வீடு கட்டுவதற்கான 'பிளானிங் அப்ரூவல்' இனி தேவையில்லை என்று ஒரு சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதே, அந்த சட்டம் அமலாகியுள்ளதா?
கே.எம்.ஜேன்சி, மதுரை. அது சட்ட மசோதா அல்ல. தமிழக பட்ஜெட்டில் அப்படி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது 2,500 ச.அடி வரையிலான அடிமனையில், 3,500 ச.அடி வரை எழுப்பப்படும் தரைதளம் அல்லது தரை பிளஸ் முதல் மாடி இருக்கக்கூடிய கட்டடங்களுக்கு உடனடியாக பத்திரப் பதிவு செய்யலாம், கட்டட அனுமதி தேவையில்லை என்று சொல்லப்பட்டது. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது போன்று தெரியவில்லை. இது தொடர்பான அரசு அறிவிக்கை ஏதும் வரவில்லை. சிறிது சிறிதாக, 24 காரட் டிஜிட்டல் தங்கம் வாங்கி சேமிக்கலாமா? அதில் இன்றைய வாங்கும் விலை, விற்பனை விலை ஜி.எஸ்.டி.,யுடன் தெரிவிக்கப்படுகிறது. இதில் தங்கம் வாங்கி சேமிப்பது நம்பகத்தன்மை உடையதா?
ஏ.சந்திரசேகரன், சென்னை.டிஜிட்டல் தங்க சேமிப்பு என்பதில் உள்ள ஒரு பெரிய வாய்ப்பு, உங்களால் எவ்வளவு பணம் போடமுடியுமோ, அந்த அளவுக்கு தங்கம் வாங்கி சேமித்து வைக்கப்படும். சில இடங்களில் 100 ரூபாய்க்குக் கூட தங்கம் வாங்க முடியும். அதாவது அன்றைய தேதியில், அப்போதை விலையில், 100 ரூபாய் மதிப்புள்ள துளி தங்கம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். நம்பகத்தன்மை என்பது ஒரு முக்கிய பிரச்னை. இந்தியாவில் டிஜிட்டல் தங்கம் என்ற 'புராடக்ட்' சட்ட ரீதியாக வரையறை செய்யப்படவில்லை, கட்டுப்படுத்தப்படவில்லை. ஆர்.பி.ஐ., செபி என்று யாரும் இதனை நிர்வகிக்கவில்லை. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யும்போது இதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தனியார் பொது காப்பீடு நிறுவனத்தில் முகவராக உள்ளேன். வாகனங்களுக்காக காப்பீடு செய்யும் போது தரப்படும் பாலிசியில் என் பெயர் மற்றும் செல்போன் எண் குறிப்பிடுகின்றனர். கூடவே, என் பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் அச்சிட்டு தருகின்றனர். இது தவறாக பயன்படுத்தப்படுமோ என்று சந்தேகமாக உள்ளது. இது பற்றி கிளை அலுவலகத்தில் கூறினால், கார்ப்பரேட் கம்பெனி. என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள் என்று கூறுகின்றனர். இதற்கு என்ன தீர்வு சார்?
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்கொஞ்சம் தலையைச் சுற்றித் தான் மூக்கைத் தொடவேண்டும். யு.ஐ.டி.ஏ.ஐ., வலைதளத்திற்குப் போய், உங்கள் ஆதாரை பூட்டி வைக்கமுடியும். தேவைப்படும்போது திறந்து கொள்ளலாம். பான் எண் தவறாகப் பயன்படுவதைத் தடுக்க, உங்கள் வங்கிக் கணக்கை அவ்வப்போது சரி பார்த்துக்கொண்டே இருங்கள். சந்தேகமான பரிவர்த்தனைகள், நீங்கள் செய்யாத பரிவர்த்தனைகள் இருக்குமானால், உஷார் அடையுங்கள். சிபில் போன்ற கிரெடிட் பீரோக்களில் போய், உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்ன என்பதைப் பாருங்கள். உங்கள் ஸ்கோர் குறைந்திருந்தால், வேறு யாரோ உங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதை யூகிக்கலாம். அதேபோல், வருமான வரிப் படிவம் 26ஏவில் உங்கள் பான் எண்ணைக் கொண்டு நடைபெறும் அனைத்துப் பரிவர்த்தனை களும் பதிவாகும். அவ்வப்போது படிவம் 26ஏ சரிபாருங்கள். என் ஆண்டு சம்பளம் 3 லட்சம் ரூபாய். பங்குச் சந்தை குறுகிய கால வருமானம் - 3.40 லட்சம் ரூபாய். ஆக என் மொத்த ஆண்டு வருமானம் - 6.40 லட்சம் ரூபாய். இதைத் தவிர வேறு இதர வருமானம் எதுவும் இல்லை. நான் வருமான வரி கட்ட வேண்டுமா?
வி.ராமன், சென்னை.பங்குச் சந்தை குறுகிய கால வருமானம் என்றால், பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படியென்றால், நீங்கள் ஐ.டி.ஆர்., - 2 படிவத்தை நிரப்பி, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். என் மகள் கருவுற்றிருக்கிறார். பிரசவத்துக்காக காப்பீடு எடுக்கலாமா? இப்போது எடுத்தால், அவரது மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியுமா?
கே.மீனா ஹரி, சென்னை.உங்கள் மகள் கருத்தரித்து எத்தனை மாதங்கள் ஆகியுள்ளன என்பதைத் தாங்கள் குறிப்பிடவில்லை. நான்கைந்து மாதங்கள் ஆகியிருந்தால், பிரசவ காப்பீடு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் வழக்கமான மருத்துவ காப்பீட்டில், பிரசவத்துக்கான கவரேஜ் கிடைக்க 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது சந்தையில் உள்ள பல பிரசவ காப்பீடு திட்டங்களில், 9 மாதங்களிலேயே பிரசவ செலவினங்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் உள்ளன. மேலும், இந்தக் காப்பீட்டுடன் பல கூடுதல் 'ஆட் ஆன்' அம்சங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது, ரூம் வாடகை உச்சவரம்பு கூடாது, மருத்துவமனையில் வாங்கக்கூடிய ஊசி, விரிப்பு, நாப்கின் உள்ளிட்ட 'கன்சியூமபிள்ஸ்'யும் உள்ளடக்க வேண்டும் என்பன போன்ற 'ஆட் ஆன்' அம்சங்களையும் முன்கூட்டியே காப்பீடில் சேர்த்துக்கொள்ளலாம். பல இளம் தாய்மார்கள், கருவுறுவதற்கு முன்பே திட்டமிட்டு, இத்தகைய காப்பீடுகளை வாங்குகின்றனர். வங்கி வைப்புநிதி வட்டி உயராது என்றீர்கள். தற்போது எஸ்.பி.ஐ., உயர்த்தியுள்ளதே. என்ன காரணம்?
ஜே.ஞானசைமன், கோவை.குறுகிய கால வைப்புநிதித் திட்டங்களுக்கு, 0.25 முதல் 0.75 சதவீதம் வரை எஸ்.பி.ஐ., வட்டியை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் அந்த வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்த விஷயம் முக்கியமானது. கடந்த நிதியாண்டில், அந்த வங்கி கொடுத்த கடன் அளவு 15.24 சதவீதம் அளவுக்கு வளர, அது திரட்டிய வைப்புநிதியோ 11.13 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில், கிட்டத்தட்ட 14 முதல் 16 சதவீத அளவுக்கு கடன் வளரும் என்று கணித்துள்ளார். அப்படியானால், அதற்கு ஏற்ப அவர்கள் மூலதனத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதனால் தான், தற்போது வைப்பு நிதி வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கோ இன்னும் 0.50 சதவீதம் அதிகம். மற்ற வங்கிகளும் இதே வழியைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கலாம். தொழில்வளர்ச்சி படுவேகமாக முன்னேறுவது, நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குப் பயன் தருவது இப்படித் தான்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com ph98410 53881