உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சரிவிலிருந்து மீண்ட அதானி குழுமம்

சரிவிலிருந்து மீண்ட அதானி குழுமம்

புதுடில்லி : அதானி குழுமம், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்த பின், கடந்தாண்டு பங்குகள் மற்றும் கடன் வாயிலாக 1.25 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவனம், அதன் ஆய்வறிக்கையில், அதானி குழுமம் சந்தையை தவறாக கையாண்டுள்ளதாகவும், அதன் கணக்குகளில் மோசடிகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெகுவாக சரிவைக் கண்டது. ஆனால் விரைவாகவே அந்த பாதிப்பிலிருந்து மீண்டு பங்குகள் வாயிலாக 41,500 கோடி ரூபாயும்; கடன் வாயிலாக 83,500 கோடி ரூபாயும் திரட்டியுள்ளது.கடந்தாண்டு துவக்கத்தில் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருந்த அதானி, ஹிண்டன்பர்க் அறிக்கையின் தாக்கம் காரணமாக தன் சொத்து மதிப்பில் 5 லட்சம் கோடி ரூபாயை இழக்க நேரிட்டது. எனினும் தற்போது இழந்த மதிப்பில் பெரும்பாலானவற்றை திரும்பப் பெற்றுவிட்டார். கடந்தாண்டு மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே பிரபல முதலீட்டாளரான 'ஜி.க்யூ.ஜி., பார்ட்னர்ஸ்' அதானி குழுமத்தின் ஐந்து நிறுவனங்களில் 36,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது. மேலும் 'அதானி க்ரீன் எனர்ஜி' நிறுவனத்தில் 'கத்தார் இன்வெஸ்ட்மென்ட் ஏஜன்சி மற்றும் டோட்டல் எனர்ஜீஸ்' நிறுவனங்கள் 6,400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.இது தவிர பசுமை முதலீடுகள், பங்குகளுக்கு எதிரான கடன் மற்றும் சிமென்ட் நிறுவனங்களை கையகப்படுத்த வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துதல் ஆகிய காரணங்களுக்காக, குழுமத்தின் நிறுவனர்கள் 38,200 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். மேலும், கடன் வாயிலாக ஐந்து நிறுவனங்களிடமிருந்து 53,200 கோடி ரூபாய் திரட்டியது; 29,100 கோடி ரூபாய்க்கு மறு கடன் வசதியையும் பெற்றது.'சங்கி சிமென்ட்' நிறுவனத்தை 3,600 கோடி ரூபாய்க்கும்; காரைக்கால் துறைமுகத்தை 1,485 கோடி ரூபாய்க்கும்; 'கோஸ்டல் எனர்ஜன்' நிறுவனத்தை 3,500 கோடி ரூபாய்க்கும் கையகப்படுத்தியது. மேலும் 'இந்தியன் ஆயில் டேங்கிங்' நிறுவனத்தின் பங்குகளில் 1,100 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்தது. இருப்பினும், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பிருந்த 19.23 லட்சம் கோடி ரூபாயை விட, தற்போது 25 சதவீதம் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு, 1.25 லட்சம் கோடி ரூபாயை திரட்டி, மீட்சிப் பாதைக்கு திரும்பியது அதானி குழுமம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை