விமான நிறுவனங்களின் கடன் ரூ.10,500 கோடியாக உயரலாம்
மும்பை: உள்நாட்டு விமான நிறுவனங்களின் கடன், நடப்பு நிதியாண்டில் 9,500 - 10,500 கோடி ரூபாயாக இரட்டிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்களின் நிகர கடன், கடந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 5,500 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இவற்றின் கடன் நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு விமான நிறுவனங்களின் நிகர கடன், 9,500 முதல் 10,500 கோடி ரூபாயாக அதிகரிக்கக் கூடும். கடந்த நிதியாண்டின் 5,500 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் இது, கிட்டத்தட்ட இரு மடங்கு. விமான பயணியரின் எண்ணிக்கை வளர்ச்சி குறைந்துள்ளது இதற்கு ஒரு முக்கிய காரணம். அண்டை நாடுகளில் பதற்ற நிலை, சர்வதேச அளவிலான இடையூறுகள், ஆமதாபாத் விமான விபத்து உள்ளிட்டவை பயணியரின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை 1.43 கோடியாக இருந்தது. இது கடந்தாண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.50 சதவீதம் அதிகம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. விமான தயாரிப்பு, பராமரிப்பில் தொடர்ந்து நிலவும் சிக்கல்கள், இன்ஜின் பழுது காரணமாக தரையிறக்கப்படும் விமானங்கள் அதிகரிப்பு கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 133 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இது உள்நாட்டு விமான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 17 சதவீதம் காரணங்கள் பயணியர் எண்ணிக்கை வளர்ச்சி குறைவு புதிய விமானங்களின் டெலிவரி செலவு மூலதன, செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பு