காஞ்சிபுரம் தொழில் பூங்காவில் பேட்டரி சோதனை மையம்
சென்னை, அக். 5- காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கம் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான தொழில் பூங்காவில், 75 கோடி ரூபாயில் மின் வாகன பேட்டரி சோதனை மையம் உள்ளிட்ட கட்டுமான பணிக்கு, 'சிப்காட்' நிறுவனம், டெண்டர் கோரியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 379 ஏக்கரில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான தொழில் பூங்காவை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்து வருகிறது. அங்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், 'எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு தொகுப்புகள் 2.0' திட்டத்தின் கீழ், 212 கோடி ரூபாயில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான சோதனை, வடிவமைப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது, 75 கோடி ரூபாய் செலவில், சூரிய மின் திட்டத்திற்கு பயன்படும் சூரிய ஒளிசார்ந்த கதிரியக்க சோதனை மையம் மற்றும் மின்னணு சான்றிதழ் ஆய்வகம், மின் வாகன பேட்டரி மற்றும் சார்ஜர் சோதனை ஆய்வகம், திறன் மேம்பாட்டு மையம் ஆகிய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.