மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
28-Sep-2024
தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களை தற்போதைக்கு உயர்த்தும் திட்டம் இல்லை என, மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் இலச்சினை மாற்றம் மற்றும் தேவையற்ற மற்றும் மோசடி அழைப்புகளை தடுக்கும் வசதி உள்ளிட்ட ஏழு அம்ச மேம்பாடுகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் பேசிய பி.எஸ்.என்.எல்., தலைவர் ராபர்ட் ரவி, வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மற்றும் அவர்களது நம்பிக்கையை பெறுவதே தங்கள் நிறுவனத்தின் குறிக்கோள் என்றார். சோதனை அடிப்படையில் வழங்கப்படும் 4ஜி சேவை, இந்தாண்டு இறுதிக்குள் முழுமையான சேவையாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.பஜாஜ் இன்சூரன்சில் இருந்துவிலகுகிறது 'அலையன்ஸ்'தனியார் ஆயுள் மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான 'பஜாஜ் அலையன்ஸ்' கூட்டு வர்த்தகத்தில் இருந்து, அலையன்ஸ் நிறுவனம் விலக திட்டமிட்டுள்ளதாக, பங்குச் சந்தைகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீடு நிறுவனத்தில், 74 சதவீதத்தை பஜாஜ் வைத்துள்ள நிலையில், அலையன்ஸ் வசம் 26 சதவீத பங்குகள் உள்ளன. விலகல் தொடர்பாக பேச்சு நடப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், அலையன்ஸ் விலகியதும், காப்பீடு நிறுவனத்தின் மொத்த உரிமையும் பஜாஜ் நிறுவனம் வசமாகும். வேறு காப்பீடு நிறுவனத்துடன் கைகோர்ப்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அலையன்ஸ் நிறுவனம், நிச்சயம் காப்பீடு துறையில் நீடிக்க உள்ளதாக கூறியுள்ளது.நிலக்கரி வர்த்தக சந்தை முதன்முதலாக அறிமுகமாகிறதுபங்கு சந்தைகள், பண்டக சந்தைகள் போல், நிலக்கரி வர்த்தகத்துக்கு தனி சந்தை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பேச்சு, இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். நிலக்கரி வர்த்தக சந்தை அமைக்க, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருப்பதாக, நிலக்கரி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இணையதள வழி நிலக்கரி வர்த்தக சந்தை வாயிலாக, நிலக்கரி விற்பனை, கொள்முதல் நடைபெறும் என்றும், நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பின் கண்காணிப்பில் நிலக்கரி வர்த்தக சந்தை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரியன்ட் சிமென்டை வாங்கும் அதானியின் அம்புஜா சிமென்ட்சி.கே., பிர்லா குழுமத்தைச் சேர்ந்த 'ஓரியன்ட் சிமென்ட்ஸ்' நிறுவனத்தை 8,100 கோடி ரூபாய் முதலீட்டில், அதானி குழுமத்தைச் சேர்ந்த 'அம்புஜா சிமென்ட்ஸ்' வாங்கவுள்ளது. ஓரியன்ட் சிமென்ட் நிறுவனத்தின் 46.80 சதவீத பங்குகளை வாங்க, அதானி குழும அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்த ஒப்பந்தம் இறுதியானதும் அதானி சிமென்ட் நிறுவனங்களின் மொத்த சிமென்ட் உற்பத்தி, ஆண்டுக்கு 1.16 கோடி மெட்ரிக் டன் அதிரிக்கும். ஹைதராபாதைச் சேர்ந்த 'பென்னா சிமென்ட்' நிறுவனத்தை அதானி குழுமம், 10,422 கோடி ரூபாய்க்கு கடந்த ஜூனில் வாங்கியது.
28-Sep-2024