உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இனி ஒரு வாகனம் கூட தயாரிக்க முடியாது: பஜாஜ் கைவிரிப்பு

இனி ஒரு வாகனம் கூட தயாரிக்க முடியாது: பஜாஜ் கைவிரிப்பு

மும்பை:அரிய வகை காந்தம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆகஸ்டில் மின்சார வாகன உற்பத்தி முழுமையாக நின்றுவிடும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சீனாவின் கட்டுப்பாடுகளால், சேத்தக் ஸ்கூட்டர் மற்றும் கோகோ ஆட்டோ ஆகிய மின்சார வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நடப்பு மாதத்தில், உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில், ஒரு மின்சார வாகனத்தை கூட உற்பத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளோம். நாங்கள் அதிக அளவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதால், காந்தங்களின் இருப்பு சில வாரங்களுக்கு மட்டுமே உள்ளன. இந்நிலையில் பண்டிகை நாட்களும் வருவதால், எங்கள் விற்பனை, வருவாய், லாபம் உள்ளிட்ட அனைத்தும், இதனால் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியா, அரிய வகை கனிமங்களுக்கு சீனாவை பெருமளவு சார்ந்து இருப்பது, பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரம் குறித்து, வெளிப்படையான தெளிவான விளக்கத்தை, மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். பெரு நகரங்களில், மின்சார வாகனங்களின் சந்தை பங்கு 25 சதவீதத்தை எட்டியுள்ளது. தற்போது, உற்பத்தி நிறுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் பெட்ரோல் வாகனங்களை அணுகுவர். இது மின்சார வாகன வளர்ச்சியை முடக்கிவிடும். மின்சார வாகனங்களை சார்ந்து இருக்கும், வினியோகர்கள், முகவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை