நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் வர்த்தக வாகன விற்பனை 2% உயர்வு
புதுடில்லி :வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தரவுகளின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், வர்த்தக வாகன விற்பனை 2 சதவீதம் உயர்ந்து, 4.63 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற மற்றும் குறைந்த துார சரக்கு போக்குவரத்து தேவைகள் அதிகரித்ததால் இலகு மற்றும் நடுரக வாகனங்களின் விற்பனை நிலையான வளர்ச்சியில் இருந்தன. நல்ல நெடுஞ்சாலைகள், வேகமாக செயல்படும் சுங்கச்சாவடிகள் உள்ளிட்டவை கனரக வாகன பராமரிப்பு தேவையை குறைத்தது. அதனால், கனரக வாகன பரிமாற்றமும், வாகன விற்பனையும் தாமதமானது. இது, கனரக வாகன விற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாகும். வாகன பரிமாற்றம் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களின் தேவை அதிகரித்து இருந்ததால், பஸ் விற்பனை ஏற்றத்தில் உள்ளது. வர்த்தக வாகன விற்பனை ஏற்றம் இறக்கமாக காணப்பட்டாலும், நிலையாக இருப்பதால், டீலர்களிடம் வாகன இருப்பு அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் போதுமான பருவமழை, ஜி.எஸ்.டி., குறைப்பு, கட்டுமான பணிகள் அதிகரிப்பு ஆகியவை வர்த்தக வாகன விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.