தமிழக அரசின் வான்வெளி கண்காட்சி 16 நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்பு
சென்னை:வான்வெளி மற்றும் ராணுவ துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னையில் வரும் அக்., 7ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடத்தும் கண்காட்சியில், 16 நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தமிழகத்தில், வான்வெளி மற்றும் ராணுவ துறையில் அடுத்த பத்து ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்த துறைகளில் பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பதில், 'டிட்கோ'அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பி.சி.ஐ., ஏரோஸ்பேஸ் நிறுவனம், மத்திய ராணுவ அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மை யத்தில் வரும் அக்., 7, 8, 9ல், வான்வெளி மற்றும் ராணுவ துறை நிறுவனங்களின் கண்காட்சி, மாநாட்டை, 'டிட்கோ' நடத்துகிறது. 'டிட்கோ' நிறுவனம், சென்னையில் அக்டோபர் 7ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடத்தும் வான்வெளி கண்காட்சியில், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்கின்றன.