| ADDED : பிப் 21, 2024 12:54 AM
திருப்பூர்:சர்வதேச அளவில் பஞ்சின் விலை குறைவாக இருப்பதால், நிபந்தனையுடன் கூடிய வரி விலக்குடன் பஞ்சு இறக்குமதி செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக, பருத்தி மார்க்கெட்டில், பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. பின்னலாடை உற்பத்தியாளர் உள்ளிட்டோர் பயன்பெற, கட்டுப்பாடற்ற இறக்குமதியை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.இந்நிலையில், பருத்தி பஞ்சு தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக, 32 மி.மீ., தரத்துக்கு மேற்பட்ட பஞ்சை மட்டும், 20ம் தேதியிலிருந்து, வரிவிலக்குடன் இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:பருத்தி பஞ்சு இறக்குமதியில், 32 மி.மீ., தரத்துக்கு மேற்பட்ட பஞ்சு பேல்களை வரியின்றி இறக்குமதி செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. நெசவு பிரிவுக்கான, 60, 80 மற்றும் 100ம் நம்பர் நுால் தயாரிப்புக்கு மட்டுமே இது உதவியாக இருக்கும். அதாவது, மிக கூடுதல் நீளமுள்ள பருத்தி இழை தயாரிக்கும் தரமான பஞ்சுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.சர்வதேச அளவில், பஞ்சு விலை குறைவாக இருப்பதால், போலி 'பில்' தயாரித்தும், பஞ்சு இறக்குமதி செய்யவும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த ஜவுளித்துறைக்கு தேவையான பஞ்சு இறக்குமதி செய்ய, முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.