டாடா குழுமத்தை உடைக்க சைரஸ் மிஸ்திரி முயற்சித்தாரா? டாடா வாழ்க்கை வரலாற்று நுாலாசிரியர் சுவாரஸ்ய தகவல்
புதுடில்லி:ரத்தன் டாடாவால், டாடா குழும தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி, குழுமத்தையே உடைக்க முயற்சித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.சமீபத்தில் மறைந்த ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை 'ரத்தன் டாடா எ லைப்' என்ற பெயரில் தாமஸ் மேத்யூ புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில், டாடா குழுமத்தில் முக்கிய பொறுப்பு களை வகித்து வந்த பலர் கூறியதாக, பல்வேறு விஷயங்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்த புத்தகம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:டாடா குழும தலைவராக சைரஸ் மிஸ்திரியின் செயல்பாடுகள், குழுமத்தை உடைக்க முற்படுவது போலவே இருந்தது என, குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள் பலரும் தெரிவிக்கின்றனர். சங்கடம்
மிஸ்திரியின் 'ஷபூர்ஜி பல்லோன்ஜி' குழுமம், டாடா குழும பங்குகளை வாங்கிய முறை, பலருக்கும் அதிருப்தி தருவதாக இருந்துள்ளது. டாடா குடும்ப உறுப்பினர்களின் சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அந்த குழும பங்குகளை ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் வாங்கிக் குவித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ரத்தன் டாடா தன் சகோதர, சகோதரிகளுக்கு வழங்கிய பங்குகளையும் வாங்கியதன் வாயிலாக, டாடா குழுமத்தில் ஷபூர்ஜி பல்லோன்ஜியின் பங்கு 18 சதவீதமாக அதிகரித்தது. இதனால், ரத்தன் டாடாவும் மிகவும் சங்கடம் அடைந்துள்ளார். இது ஒருபுறமிருக்க, குழுமத்தின் தலைவராக மிஸ்திரி பொறுப்பேற்ற பின், இயக்குனர்கள் நியமனத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இவை, நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும், மிஸ்திரியின் அணுகுமுறை, குழுமத்தின் பாரம்பரிய கட்டமைப்பை சீர்குலைத்து, அதன் ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதினர். ரத்தன் டாடா மிகவும் அடக்கமான, பண்பான மனிதர் என்பதால், அவர் மிஸ்திரியின் செயல்பாடுகள் குறித்து எதுவும் கூறவில்லை. இருப்பினும், “சைரஸ் மிஸ்திரி, டாடா குழுமத்தை உடைக்க முற்பட்டார் என்றே நீங்களும் கருதுகிறீர்களா?” என்று நான் கேட்டபோது, “பதில் சொல்ல விரும்பவில்லை,” என்ற அவரது பதிலே, மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. கடந்த 2011ம் ஆண்டு, குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரியை தேர்வு செய்வது குறித்து, குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் சிலர் தயக்கம் காட்டிய நிலையில், ரத்தன் டாடா இரண்டு நிபந்தனைகளோடு, ஒப்புதல் அளித்தார். முதலாவது, டாடா குழுமம் ஈடுபட்டு வரும் பல்வேறு வணிகங்களில் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமமும் செயல்பட்டு வருவதால், அதன் நிர்வாக இயக்குனராக இருந்த சைரஸ் மிஸ்திரி, அந்த குழுமத்துடனான அனைத்து உறவையும் துண்டிக்க வேண்டும் என தெரிவித்தார். இரண்டாவது, டாடா குழுமத்தின் தலைவராவதற்கு முன், ஓர் ஆண்டுக்கு ரத்தன் டாடாவுடன் இணைந்து தலைவராக செயல்பட வேண்டும் என்பது.ஆனால், டாடா குழுமத்தின் தலைவரான பிறகும் சைரஸ் மிஸ்திரி, ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்துடனான உறவை முறித்துக் கொள்ளவில்லை. இது, ரத்தன் டாடாவுக்கு பிடிக்கவில்லை. தவறை சரி செய்ய முற்படுவதா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக விடுவதா என்றபோது, மிஸ்திரியை மாற்றியாக வேண்டும் என்ற வேதனைக்குரிய முடிவை, ரத்தன் டாடா எடுக்க நேரிட்டது. வெளியேற்றம்
இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதத்தில் கையெழுத்திட்டு விலகிவிடுமாறு மிஸ்திரியிடம் டாடா தெரிவித்துள்ளார். ஆனால், அது நடக்காத காரணத்தால், இயக்குனர் குழு கூட்டத்தில் ஓட்டெடுப்பு வாயிலாக மிஸ்திரி வெளியேற்றப்பட்டார்.தன் ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடா மீது, ரத்தன் டாடா அதிக அன்பு வைத்திருந்த போதிலும், மிஸ்திரிக்கு பதிலாக அவரை தேர்வு செய்யவில்லை. என் புரிதலில், இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை வழிநடத்தக்கூடிய அனுபவம், நோயல் டாடாவுக்கு அப்போது இல்லை என்று ரத்தன் டாடா எண்ணிஇருக்கலாம். இவ்வாறு தாமஸ் மேத்யூ தெரிவித்துள்ளார்.ஒருவேளை நோயலை டாடா குழுமத் தலைவராக அன்றே ரத்தன் டாடா தேர்வு செய்திருந்தால், டாடா குழுமத்தின் வரலாறு வேறு மாதிரியாகவும் மாறியிருக்கக்கூடும்.மிஸ்திரியின் அணுகுமுறை, குழுமத்தின் பாரம்பரிய கட்டமைப்பை சீர்குலைத்து, அதன் ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதினர்