உள்ளூர் செய்திகள்

துளிகள்

ரூபாயில் பண்டு

பி ரிக்ஸ் நாடுகளின், புதிய வளர்ச்சி வங்கி, முதல்முறையாக, இந்திய ரூபாய் மதிப்பில் பண்டு வெளியிட்டு முதலீட்டை திரட்ட, ரிசர்வ் வங்கியுடன் பேச்சு நடத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டின் மார்ச் மாதத்துக்குள், 3,500 முதல் 4,400 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, 3- - 5 ஆண்டுகள் முதிர்வடையும் பண்டு வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவின் யுவான், தென்னாப்ரிக்காவின் ராண்ட் மதிப்பில் பத்திரங்களை வெளியிட்டு, புதிய வளர்ச்சி வங்கி முதலீட்டை திரட்டி உள்ளது.

வி.ஐ.பி., பங்குகள் விற்பனை

மும்பையை சேர்ந்த லக்கேஜ் தயாரிப்பாளரான வி.ஐ.பி., இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 6.22 சதவீத பங்குகளை, இரு முதலீட்டாளர்கள் சந்தையில் நேரடியாக விற்றுள்ளனர். பங்கு ஒன்றின் விலை 388 ரூபாய் என்ற அளவில் 343 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்று, முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர். இதனால், இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் மற்றும் முதலீட்டாளர்கள் குழுமத்தின் பங்குகள் 51.73 சதவீதத்தில் இருந்து, 45.51 சதவீதமாக குறைந்தது.

13,000 பேர் பணிநீக்கம்

ஜெ ர்மனியில் தன் வாகன உதிரி பாகங்கள் மற்றும் மென்பொருள் பிரிவில் பணிபுரியும் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக பொறியியல் நிறுவனமான 'பாஷ்' அறிவித்துள்ளது. சந்தையில் தேவை கணிசமாக குறைந்ததுடன், செலவு அதிகரிப்பு மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் கடும் போட்டியை சமாளிக்கும் விதமாக, இதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு காரணமாக, செலவினங்கள் அதிகரித்ததாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.

கைமாறியது ஹிந்துஸ்தான் கிளாஸ்

உ காண்டாவைச் சேர்ந்த 'மத்வானி' குழுமத்துக்குச் சொந்தமான 'இன்ஸ்கோ', கன்டெய்னர் கிளாஸ் தயாரிப்பாளரான 'ஹிந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் அண்டு இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. கடந்த ஆக.14ல், ஹிந்துஸ்தான் நிறுவனத்தை 2,250 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் பரிவர்த்தனைக்கு, தேசிய கம்பெனி சட்ட வாரியம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து, ரிசர்வ் வங்கியும், போட்டி ஆணையமும் ஒப்புதல் அளித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ