தொழிற்கடன் வட்டி மானியம் இல்லை ஏற்றுமதியாளர்கள் தொடர் ஏமாற்றம்
திருப்பூர்:'பேக்கிங் கிரெடிட் மீதான வட்டி மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்' என, ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அன்னிய செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதியாளருக்கு, ஊக்குவிப்பு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏற்றுமதி பொருட்கள் உற்பத்திக்கு, ஏற்றுமதியாளர்கள் வங்கியில் பெறும் தொழிற்கடனுக்கான வட்டியில் மானியம் கிடைத்து வந்தது.நடுத்தர நிறுவனங்களுக்கு 3 சதவீதமும்; குறு, சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீதமும் வட்டி மானியம் வழங்கப்பட்டது. கடந்த டிச., மாதத்துடன், இத்திட்டம் முடிந்தது. பட்ஜெட்டில் மானிய நீட்டிப்பு அறிவிக்கப்படுமென, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். தற்போது, ஆறு மாதங்களாகியும் அது தொடர்பான அறிவிப்பு இல்லை.மீண்டும் வட்டி மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பல்வேறு வகையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், வட்டி மானியத்தை மட்டுமே லாபமாக கணக்கிட்டு வந்தோம். டிச., மாதத்துக்கு பின், 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியத்தை நீட்டிக்கும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.நீண்ட இடைவெளிக்கு பின், ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில், வட்டி மானியம் வழங்குவது, ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக இருக்கும்.இவ்வாறு கூறினர். ' பேக்கிங் கிரெடிட் ' என்பது என்ன? திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், ஒவ்வொரு பின்னலாடை ஆர்டரையும் 60 முதல் 90 நாட்களில் முடித்து அனுப்புகின்றனர். ஆர்டர் ஒப்பந்தம் உறுதியானதும், அதன் அடிப்படையில், வங்கியில் குறுகியகால கடன் பெற்று, உற்பத்திக்கான நிதியை திரட்டுகின்றனர். மற்ற கடன்களை காட்டிலும், இக்கடனுக்கு வட்டி குறைவு.ஆடைகளை ஏற்றுமதி செய்த பின், அதற்கான தொகை கிடைத்ததும், குறுகிய கால கடனை வட்டியுடன் திரும்ப செலுத்துகின்றனர். வங்கிகளால் பேக்கிங் கிரெடிட் எனப்படும் இக்கடன்களுக்கு மட்டும், மத்திய அரசால், 3 முதல் 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டு வந்தது.