பிளிப்கார்ட் காப்பீடு விதிமீறல் ஒரு கோடி ரூபாய் அபராதம்
புதுடில்லி:ஆன்லைன் காப்பீடு தொடர்பான விதிமீறலுக்காக, மின்னணு வணிக தளமான பிளிப்கார்ட்டுக்கு, ஐ.ஆர்.டி.ஏ., ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஐ.எப்.பி.எல்., எனப்படும், பிளிப்கார்ட் இன்டர்நெட் பிரைவேட் நிறுவனம், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் முகவராக செயல்பட்ட ஐ.எஸ்.என்.பி., எனப்படும், 'இன்சூரன்ஸ் செல்ப் நெட்வொர்க் பிளாட்பார்ம்' என்ற இடைத்தரகு நிறுவனத்தின் காப்பீடுகளை வாங்குவதற்காக, வாடிக்கையாளர்களை திருப்பி விடுவது கண்டறியப்பட்டது. ஐ.ஆர்.டி.ஏ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் விதிமுறைகளின் படி, வணிக தளங்கள், காப்பீட்டாளருடன் மட்டுமே வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இடைத்தரகர்களுடன் அல்ல. இது வாடிக்கையாளரை தவறாக வழி நடத்துவதாகும்.மேலும், பிளிப்கார்ட் மற்றும் காப்பீடு இடைத்தரகு நிறுவனத்துடனான ஒப்பந்தம், 2024 மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில், அதன் பிறகும், 2024 ஆகஸ்ட் மாதம் வரை வாடிக்கையாளர்களை திருப்பி விடும் செயல் தொடர்ந்துஉள்ளது கண்டறியப்பட்டது. இதேபோன்று, ஒரு நிறுவன முகவராக, பிளிப்கார்ட்டின் பதிவு சான்றிதழ் காலாவதியான நீண்ட காலத்துக்கு பிறகும், அதன் வலைதளம் வாயிலாக காப்பீடுகள் விற்பனையை தொடர்ந்துள்ளது. கூடுதலாக, காப்பீடு ஆணையத்தின் விதிமுறைகள் 2015ஐ மீறியதும் கண்டறியப்பட்டது. இதுபோன்ற பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், பிளிப்கார்டுக்கு, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் 1.06 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.