விலை உயர்வால் தங்கத்தின் தேவை 10 சதவிகிதம் சரிவு
மும்பை: விலை உயர்வு காரணமாக, நாட்டின் தங்கத்தின் தேவை, கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையே 10 சதவீதம் குறைந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
போர், வரி விதிப்பு என சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலை, கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தங்கத்தின் தேவை குறித்து உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், இந்தியாவின் தங்கத்தின் தேவை 10 சதவீதம் சரிந்து 134.90 டன்னானது. இது கடந்தாண்டின் இதே காலத்தில் 149.70 டன்னாக இருந்தது. விலை உயர்வு காரணமாக, தங்க நகை தேவையும் 17 சதவீதம் சரிந்துள்ளது. https://x.com/dinamalarweb/status/1951480207912952272தேவை குறைந்துள்ளபோதிலும் மதிப்பு அடிப்படையில் தங்கத்தின் தேவையும், தங்க நகை தேவையும் கணிசமான வளர்ச்சி கண்டுள்ளன. கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையே, உள்நாட்டு சந்தையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் சராசரி விலை 90,307 ரூபாயாக அதிகரித்துள்ளது, தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. முதலீட்டை பொறுத்தவரை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 7 சதவீதம் உயர்ந்து 46 டன்னாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இறக்குமதி 34 சதவீதம் சரிந்து 102.50 டன் ஆனது. முதல் ஆறு மாதங்களில் தேவை 253 டன்னாக இருந்தது. விலையை பொறுத்து, நடப்பாண்டுக்கான மொத்த தங்கம் தேவை 600 முதல் 700 டன்னாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளது.