புதுடில்லி:நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில், 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.60 சதவீதமாக சரிந்துள்ளது. சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, நிலக்கரி ஆகிய துறைகளின் வளர்ச்சி சரிந்ததே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கு முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் வளர்ச்சி 0.90 சதவீதமாக சரிந்திருந்தது. இத்துறைகளின் வளர்ச்சி, கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 4.90 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஜனவரியில் 9.70 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும். இவை, நாட்டின் தொழில் துறை உற்பத்தியைக் கணக்கிடுவதில், 40.27 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.கடந்த ஜனவரி மாதத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் தயாரிப்பு துறையின் வளர்ச்சி மைனஸ் நிலையிலேயே இருந்தது. நிலக்கரி, உருக்கு மற்றும் மின்சாரத் துறையின் வளர்ச்சி சரிந்தது. எனினும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சிமென்ட் துறைகள் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தன. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 7.70 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 8.30 சதவீதமாக இருந்தது.