ஹோட்டல், ஷோரூம்களுக்கு அனுமதியில்லை தொழிற்பேட்டை விதிகளை மாற்றும் சிட்கோ கிடங்கு, பார்சல் சேவைக்கு அனுமதி
சென்னை: சென்னை கிண்டி, அம்பத்துார் தொழிற்பேட்டைகளில், 'கமர்ஷியல்' சேவையின் கீழ் சேமிப்பு கிடங்கு, பார்சல் சர்வீஸ், அலுவலகத்தை அனுமதிக்கவும், ஹோட்டல் மற்றும் வாகன ஷோரூமுக்கு அனுமதி கூடாது எனவும், 'சிட்கோ' முடிவு செய்துள்ளது. கிண்டி, அம்பத்துார், தொழிற்பேட்டைகளில், குறிப்பாக கிண்டியில் கார், பைக் ஷோரூம்கள், தங்கும் வசதி உடைய ஹோட்டல்கள் என, 'கமர்ஷியல்' ரீதியிலான தொழில் நிறுவனங்கள் அதிகளவில் துவக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், தொழிற்பேட்டையின் அடிப்படை நோக்கம் சிதைவதாக, தொழில் முனைவோர் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றனர். இதையடுத்து, தொழிற்பேட்டைகளிலும் கமர்ஷியல் பிரிவில் எந்தெந்த தொழில்களை அனுமதிக்கலாம், அனுமதிக்கக்கூடாது என்பது குறித்து முடிவு எடுக்க, 'சிட்கோ' மேலாண் இயக்குநர் தலைமையில் உயரதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. பல முறை குழு கூடி, ஆலோசனை நடத்தியது. இதுகுறித்து சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன் தொழிற்பேட்டைகளில் மனைகளை வாங்கியவர்களில் சிலர், தற்போது, கமர்ஷியல் நடவடிக்கைக்கு வாடகை விட்டு, வருவாய் ஈட்டுவது தெரியவந்துள்ளது. இதனால், கமர்ஷியல் பிரிவின் கீழ், பார்சல் சர்வீஸ், சேமிப்பு கிடங்கு, திறன் மேம்பாட்டு மையம், அலுவலகம், இயந்திரங்கள் சேவை மையம் ஆகியவற்றை அனுமதிக்கலாம் என்றும், கார், பைக் ஷோரூம், தங்கும் விடுதியுடன் கூடிய ஹோட்டல், மதுக்கூடம் ஆகியவற்றை அனுமதிக்க கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு, 'சிட்கோ' நிறுவனம் வாயிலாக விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். கிண்டியில் உள்ள 404 ஏக்கர் தொழிற்பேட்டையில், வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி உள்ளிட்ட உற்பத்தி துறை சார்ந்த, 400க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன அம்பத்துாரில் 1,200 ஏக்கர் தொழிற்பேட்டையில், 1,600க்கும் மேற்பட்ட உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன