உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி

பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி

புதுடில்லி:நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரியில் 4.31 சதவீதமாக குறைந்துள்ளதாக, மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காய்கறிகள், முட்டை மற்றும் பருப்புகளின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த டிசம்பரில் இது 5.22 சதவீதமாகவும்; கடந்தாண்டு ஜனவரியில் 5.10 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம், பணவீக்கம் நகர்ப்புறங்களில் 3.87 சதவீதமாகவும்; ஊரகப் பகுதிகளில் 4.64 சதவீதமாகவும் இருந்தது. ஜனவரியில் உணவுப் பிரிவு பணவீக்கம் 6.02 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் 5.66 சதவீதமாக இருந்த நிலையில், அதன் பிறகு இதுவே குறைவாகும்.பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் பராமரிக்க, மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து குறைந்து வரும் பணவீக்கம், இனி வரும் மாதங்களில் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில், ரெப்போ வட்டி விகிதம் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என, நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாதங்கள் பணவீக்கம் (%)

2024ஜனவரி 5.10பிப்ரவரி 5.09மார்ச் 4.85ஏப்ரல் 4.83மே 4.75ஜூன் 5.08ஜூலை 3.54ஆகஸ்ட் 3.65செப்டம்பர் 5.49அக்டோபர் 6.21நவம்பர் 5.48டிசம்பர் 5.222025ஜனவரி 4.31

டிசம்பரில் 3.20% வளர்ச்சி

நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்தாண்டு டிசம்பரில் 3.20 சதவீதமாக குறைந்து உள்ளதாக, மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. சுரங்கம் மற்றும் தயாரிப்பு துறைகளின் மந்தமான செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணம். இது கடந்த 2023 டிசம்பரில் 4.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்தாண்டு நவம்பர் மாதத்துக்கான தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும், முன்பிருந்த 5.20 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்தாண்டு ஏப்ரல் - நவம்பர் காலத்தில் சராசரி தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ