தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் திட்டத்தால் கொங்கு மண்டலத்துக்கு தொழில் வாய்ப்பு
திருப்பூர் : தமிழக அரசின், 'தொழில்நுட்ப ஜவுளி இயக்கம்' என்ற திட்டத்தால், கொங்கு மண்டலத்தில் புதிய தொழில் வாய்ப்பு உருவாகுமென, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.சர்வதேச ஜவுளி சந்தைகளின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு, தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி அவசியம் என, பல்வேறு நாடுகளும் உணர்ந்துள்ளன. மத்திய அரசு, 2019ம் ஆண்டில், தொழில்நுட்ப ஜவுளி என, 207 வகையான பொருட்களை அறிவித்தது. அவற்றில், 12 வகையான பொருட்கள், ஆயத்த ஆடை உற்பத்தி துறையை சார்ந்தது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், தொழில்நுட்ப ஜவுளித்துறைக்கு பிரத்யேக கவுன்சில் உருவாக்கப்பட்டது. தமிழக அரசும், தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் துவங்கப்படுமென, பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின், தொழில்நுட்ப ஜவுளி மேம்பாட்டு திட்டங்களால், புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல் கிடைக்கும். நிதி ஆதாரங்களும் உருவாக்கப்படும். மருத்துவர் மற்றும் செவிலியர் சீருடை, படைவீரர்களுக்கான சீருடை, விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆடைகள், பொறியியல் தொழில்நுட்ப பணியாளர் சீருடைகள், கப்பல் பணியாளர் சீருடை என, பல்வேறு வகையான தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசு திட்டத்துடன், தமிழக அரசின் திட்டமும், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும். இவ்வாறு கூறினார்.
தொழில்நுட்ப ஜவுளி வர்த்தகம்
சர்வதேச அளவில் 26.05 லட்சம் கோடி ரூபாய் இந்திய அளவில் 2.17 லட்சம் கோடி ரூபாய் இந்திய ஏற்றுமதி 21,708 கோடி ரூபாய்