UPDATED : அக் 24, 2025 03:36 AM | ADDED : அக் 24, 2025 03:33 AM
புதுடில்லி: இந்திய பொருட்களின் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், நடப்பு நிதியாண்டில் நாட்டின் தோல் பொருட்கள் துறையினரின் வருவாய் 10 முதல் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என 'கிரிசில் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரிசில் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியாண்டில் இந்திய தோல் பொருட்கள் மற்றும் அது சார்ந்த துறையின் மொத்த வருவாய் 56,000 கோடி ரூபாய். இதில் கிட்டத்தட்ட 70 சதவீதம் ஏற்றுமதி வாயிலாக ஈட்டப்பட்டது. இந்திய ஏற்றுமதியில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பங்கு 50 சதவீதமாகவும்; அமெரிக்காவின் பங்கு 22 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது. முதற்கட்டமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் 25 சதவீத வரி விதிக்கப்பட்டபோதே இந்திய நிறுவனங்களுக்கான ஆர்டர்கள் குறைய தொடங்கின. ஆகஸ்ட் இறுதியில் விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரி இந்திய தோல் பொருட்கள் துறையினரை மேலும் பாதித்துள்ளது. இப்பிரிவில் இந்தியாவுக்கு போட்டியாக பார்க்கப்படும் கம்போடியா, இத்தாலி, வியட்நாம் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு 15 முதல் 20 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்நாட்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டில் இந்திய தோல் பொருட்கள் துறையினரின் வருவாய் 10 முதல் 12 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளது. ஏற்றுமதி அளவும் 14 சதவீதம் வரை சரியக்கூடும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது. 1 இந்திய தோல் பொருட்களின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தது 2 கம்போடியா, இத்தாலி, பிரான்ஸ், வியட்நாமுக்கு அமெரிக்க வரி 20% மட்டுமே 3 இந்தியாவுக்கு 50% வரி விதிப்பால், ஏற்றுமதி வாய்ப்பு மற்ற நாடுகளுக்கு சென்றது