உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மாருதி, கியா நிறுவனங்கள் ஏற்றுமதியில் சாதனை

மாருதி, கியா நிறுவனங்கள் ஏற்றுமதியில் சாதனை

மும்பை; 'மாருதி சுசூகி' நிறுவனம், 30 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்தும், 'கியா' நிறுவனம், ஒரு லட்சம் அசெம்பிள் செய்யப்படாத கார்களை ஏற்றுமதி செய்தும், புதிய சாதனை படைத்துள்ளன.கடந்த 1986ம் ஆண்டு முதல் கார்களை ஏற்றுமதி செய்து வரும் மாருதி சுசூகி நிறுவனம், முதல் 10 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்வதற்கு 27 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. அடுத்த 10 லட்சம் கார்கள் ஏற்றுமதிக்கு ஒன்பது ஆண்டுகளையும், கடைசி 10 லட்சம் கார்கள் ஏற்றுமதிக்கு வெறும் மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதங்களையும் மட்டுமே எடுத்துக் கொண்டது.உள்நாட்டு கார் ஏற்றுமதியில், மாருதி நிறுவனத்தின் சந்தை பங்கு, 40 சதவீதமாக இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும், 33,168 கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. வரும் 2030ம் நிதியாண்டிற்குள், 7.50 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக, மாருதி நிறுவனம் கூறி உள்ளது.

கியா

உலக அளவில், அசெம்பிள் செய்யப்படாத கியா கார்களை ஏற்றுமதி செய்வதில், இந்தியா 50 சதவீத பங்கை பெற்று, கியா நிறுவனத்தின் முக்கிய ஏற்றுமதி மையமாக விளங்குகிறது. நடப்பு ஆண்டில் மட்டும், 38,000 கார்களை ஏற்றுமதி செய்ய இருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 'செல்டோஸ், சோனெட், கரன்ஸ்' ஆகிய மூன்று மாடல் கார்கள், இந்நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !