தொழிலுக்கு ஒற்றைச்சாளர அனுமதி சரிவர நடத்தப்படாத கூட்டங்கள்
சென்னை:தொழில் நிறுவனங்களுக்கு, அரசு துறைகளின் அனுமதியை விரைந்து பெற்று தர, மாவட்டங்களில் கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டங்கள், முறையாக நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தொழில்முனைவோரிடம் எழுந்துள்ளது.தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர பிரிவில் தொழில் துவங்குவோர், டி.டி.சி.பி., எனப்படும் நகர் ஊரமைப்பு துறை, மின் வாரியம், தீயணைப்பு, உள்ளாட்சிகள் உள்ளிட்ட பல அரசு துறைகளின் அனுமதியை பெற வேண்டியுள்ளது. இந்த அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் விரைந்து பெற்று தருவதற்கு, மாவட்ட தொழில் மையங்கள் உள்ளன. இதை கண்காணிக்க, கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து, தொழில்முனைவோர் கூறியதாவது:மாதந்தோறும் ஒற்றைச்சாளர அனுமதி வழங்கும் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடத்தப்படும். அதில், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், வங்கிகள், பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்பர். தொழில் துவங்க வந்துள்ள விண்ணப்பங்கள், அளிக்கப்பட்ட அனுமதி உள்ளிட்ட விபரங்கள் ஆய்வு செய்யப்படும். எந்த துறையில் அனுமதி தாமதம் ஆகிறதோ, அதற்கான காரணத்தை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம், கலெக்டர் விளக்கம் கேட்பார். இதனால், தாமதமின்றி அனுமதி கிடைத்து விடும். தற்போது, இந்த கூட்டங்கள் பல மாவட்டங்களில் சரியாக நடத்தப்படுவதில்லை. இதனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சில துறைகளின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.எனவே, தொழில் துவங்க விரைவில் அனுமதி கிடைப்பதற்கு உதவும், கலெக்டர் தலைமையிலான கூட்டத்தை மாதந்தோறும் முறையாக நடத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.