வரும் நிதியாண்டில் நிகர வரி வருவாய் ரூ.28.20 லட்சம் கோடியாக உயரும் ஜி.எஸ்.டி,, வசூல் 11.40 சதவீதம் அதிகரிக்கும்
புதுடில்லி:அடுத்த நிதியாண்டில், அரசின் நிகர வரி வருவாய், 28.20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து 'கேர்எட்ஜ் ரேட்டிங்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 - 26ம் நிதியாண்டில், அரசின் நிகர வரி வருவாய் 10.40 சதவீதம் அதிகரிக்கும். மொத்த வரி வருவாய் 41.40 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். நிகர வரி வருவாய் 28.20 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.நடப்பு ஆண்டைப் போலவே, அடுத்த நிதியாண்டிலும் நேரடி வரி வசூல், ஜி.எஸ்.டி., வசூல் ஆகியவை ஆரோக்கியமான வளர்ச்சி காணும். கம்பெனி வரி வருவாய் நடப்பு நிதியாண்டை விட, அடுத்த நிதியாண்டில் 11.40 சதவீதம் உயரும். ஒட்டுமொத்த நேரடி வரி வசூல் 23.30 லட்சம் கோடி ரூபாயை எட்டும்.மறைமுக வரி வளர்ச்சி 11.90 சதவீதம் அதிகரித்து, 18.10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். ஜி.எஸ்.டி., வசூல் 11.40 சதவீதம் உயர்ந்து 11.80 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்.சுங்க வரி வசூல் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு, 20 சதவீத உயர்வை பதிவு செய்யக்கூடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.வரைபட விளக்கம்நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் கடந்த 2 ஆண்டுகளாக, வருமான வரி, கம்பெனி வரியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் வரி வருவாய்/ஜி.டி.பி., ஒப்பீடு (%)நேரடி வரி மறைமுக வரி2023-24 திருத்தப்பட்ட கணிப்பு, 2024-25 பட்ஜெட் கணிப்புஆதாரம்: பட்ஜெட் ஆவணங்கள்
'மானிய சுமை உயரும்'
நடப்பு நிதியாண்டான 2024 - 25ல், நாட்டின் மொத்த மானியச் செலவு 4.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என, பேங்க் ஆப் பரோடா அறிக்கை தெரிவித்துள்ளது. 3.80 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் அரசு நிர்ணயத்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் மானிய செலவு அதிகரிக்கும் என தெரிகிறது. அரசின் இலக்கை விட இது 10 சதவீதம் அதிகம். இதில், உணவு, உரங்கள் மானியம் அதிக பங்கு வகிக்கும் என்றும்; அடுத்த நிதியாண்டில் மானியச் செலவு 4 லட்சம் கோடியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.