உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / காற்றாலை தயாரிப்புக்கு புதிய விதி ரூ.50,000 கோடி முதலீடு பாதிக்கும்

காற்றாலை தயாரிப்புக்கு புதிய விதி ரூ.50,000 கோடி முதலீடு பாதிக்கும்

புதுடில்லி:காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரி பாகங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்க, மத்திய அரசு முயற்சித்து வருவதால், 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காற்றாலைகளில் பயன்படுத்தப்படும் பிளேடுகள், டவர்கள், கியர் பாக்ஸ்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த காற்றாலையை நம் நாட்டில் விற்க அனுமதி வழங்கப்படும் என்ற வரைவு விதிமுறைகளை மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் குறித்து, காற்றாலை மின்சார தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். ஆறு மாதங்களுக்குள்ளாக கியர்பாக்ஸ் மற்றும் ஜெனரேட்டர்கள் தொடர்பான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைப்பிடிப்பதற்கு கூடுதல் அவகாசம் கோரும் அவர்கள், இதனால் 50,000 கோடி ரூபாய் முதலீடு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.மேலும் அவர்கள் தெரிவித்ததாவது:காற்றின் வேகம் அதிகம் உள்ள இடங்களில் ஏற்கனவே காற்றாலை வசதிகள் அமைக்கப்பட்டு விட்டதால், இனி காற்றின் வேகம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே வசதிகளை அமைக்க முடியும். குறைந்த வேகத்தில் சுற்றுவதற்கு பெரிய காற்றாலைகள் தேவைப்படுகின்றன.ஆனால், பெரிய காற்றாலைகளுக்கு தேவையான கியர் பாக்ஸ்களை தயாரிப்பதற்கு போதுமான திறன் நம் நாட்டில் இல்லை. இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளாவது தேவைப்படும். எனவே, கால அவகாசத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை