உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாடா அறக்கட்டளைகளின் தலைவரானார் நோயல் டாடா

டாடா அறக்கட்டளைகளின் தலைவரானார் நோயல் டாடா

மும்பை:டாடா குழுமத்தின் அறக்கட்டளை பிரிவான 'டாடா டிரஸ்ட்ஸ்' தலைவராக, நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா குழுமத்தின் கவுரவ தலைவராகவும், அதன் அறக்கட்டளைகளின் தலைவராகவும் இருந்த ரத்தன் டாடா, தன் 86வது வயதில், கடந்த 9ம் தேதி காலமானார். இதையடுத்து, நேற்று காலை நடைபெற்ற அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கூட்டத்தில், டாடா அறக்கட்டளைகளின் தலைவராக நோயல் டாடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.டாடா டிரஸ்டில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள நோயல் டாடா, மறைந்த ரத்தன் டாடாவின் சித்தி மகனாவார். இதன் வாயிலாக, டாடா டிரஸ்டின் 11வது தலைவராக, நோயல் செயல்பட உள்ளார். தோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் 'சர் ரத்தன் டாடா டிரஸ்ட்' ஆகியவை டாடா சன்ஸ் நிறுவனத்தில் மொத்தமாக, 66 சதவீத பங்குகளை வைத்துள்ளன.இந்தியாவின் மிகப்பெரிய அறக்கட்டளைகளான இவை, பல்வேறு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றன. தனக்குப் பின் இவற்றின் தலைவர் யார் என இறப்பதற்கு முன்பே ரத்தன் டாடா அறிவிக்காத நிலையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் கூடி, புதிய தலைவராக நோயல் டாடாவை தேர்வு செய்தனர்.

நோயல் டாடா யார்?

டாடா குழுமத்தில், 40 ஆண்டுகளாக பொறுப்புகளை வகிப்பவர் நோயல் டாடா. டிரென்ட்ஸ், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் தலைவராக உள்ளார். டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் உள்ளார். 2010 முதல் 2021 வரை, 'டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார்.நோயல் டாடாவின் மகன் லீ, மகள்கள் மாயா, நிவிலி டாடா ஆகியோர் டாடா அறக்கட்டளைகளில் பொறுப்புகளை வகிக்கின்றனர். ரத்தன் டாடாவின் ஒப்புதல் பெற்ற இவர்களது நியமனங்களால், டாடா குழும நிறுவனங்களிலும், கடந்த மே மாதம் 6ம் தேதி முதல் இவர்கள் பல்வேறு பொறுப்புகளை வகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை