டவ் ஜோன்ஸ் சந்தை குறியீட்டில் இன்டெல் இடத்தில் என்விடியா
நியூயார்க்:அமெரிக்காவின் 'டவ் ஜோன்ஸ்' தொழில்துறை சராசரி குறியீட்டில், 'இன்டெல்' நிறுவனத்துக்கு பதிலாக, 'என்விடியா' நிறுவனம் இடம்பெற உள்ளது. அமெரிக்க தொழில்துறை வலிமையின் அடையாளமாக கருதப்படும், 128 ஆண்டுகள் பழமையான டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீட்டில், 30 முன்னணி நிறுவனங்கள் இடம்பெறுகின்றன. அங்கு பிற சந்தைகளை போல், நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு அடிப்படையில் கருதாமல், பங்குகளின் விலை மதிப்பு அடிப்படையில், நிறுவனங்கள் இடம்பெறுகின்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் 'சிப்' தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தின் பங்குகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் 900 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டு உள்ளது. மேலும், ஏராளமான நிறுவனங்கள், முதலீட்டை அதிகரித்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு மாறத் தயாராகி வருகின்றன. சமீபத்தில் உலகின் மதிப்புமிக்க நிறுவனம் யார் என்பதில், ஆப்பிள் நிறுவனத்துக்கு கடும் போட்டி அளித்து வரும் என்விடியா, பங்கு விலை 11,374 ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதே நேரம், 1999ம் ஆண்டு டவ் ஜோன்ஸ் சந்தையில் அறிமுகமான சிப் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள இன்டெல் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. செலவு குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் கைகொடுக்காததால், உற்பத்தியில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.