உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஓலா மீதான புகாரை விசாரிக்க உத்தரவு

ஓலா மீதான புகாரை விசாரிக்க உத்தரவு

புதுடில்லி:'ஓலா எலக்ட்ரிக்' மின்சார வாகன நிறுவனம் மீதான, வாடிக்கையாளர்களின் புகார்கள் தொடர்பாக விசாரிக்க, மத்திய கனரக தொழில்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெட்ரோலிய பொருட்களின் தேவையைக் குறைக்கவும்; காற்று மாசை தடுக்க உதவும் வகையிலும் மின்சார வாகனங்களை அதிகரிப்பதற்காக, 'பேம்' என்ற பெயரில் மானிய திட்டத்தை மத்திய அரசு வழங்கி வந்தது. மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய வாகன ஆராய்ச்சி சங்கமான ஏ.ஆர்.ஏ.ஐ., வாயிலாக இதற்கான சான்றிதழை பெற்று வந்த நிலையில், ஓலாவும் 'பேம் 2' திட்டத்தின்கீழ் மானியம் பெற்ற நிறுவனமாகும். மேலும், பேம் 2 மானிய திட்டம் காலாவதியான நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமரின் 'இ-டிரைவ்' திட்டத்தின் பயனாளியாகவும் ஓலா எலக்டிரிக் உள்ளது.மத்திய கனரக தொழில் துறையின்கீழ் இயங்கும் ஏ.ஆர்.ஏ.ஐ., மின்சார வாகனங்களை பரிசோதித்து, சான்றளிப்பது வழக்கம் என்ற நிலையில், ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் பழுது குறித்து வாடிக்கையாளர்கள் அதிக அளவில் புகார் தெரிவிப்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு அத்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விளக்கத்தை கேட்டு, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடந்த 7ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுகர்வோர் உரிமைகளை மீறியதாகவும்; தவறாக வழிகாட்டும் விளம்பரங்களை வெளியிட்டு, நியாயமற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் எழுந்துஉள்ள புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க அதில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை