பதஞ்சலி ச்யவன்பிராஷ் விளம்பரத்துக்கு தடை
புதுடில்லி: மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை ஏமாற்று வேலை எனக்கூறும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் ச்யவன்பிராஷ் விளம்பரத் துக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், அனைத்து ஊடகங்களில் இருந்தும் ஏற்கனவே வெளியான விளம்பரத்தை, 72 மணி நேரத்துக்குள் அகற்றும்படி உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில், தங்களுடைய தயாரிப்பை தவிர, நாட்டிலுள்ள அனைத்து ச்யவன்பிராஷ் தயாரிப்புகளும் ஏமாற்று வேலை என்ற வரி இடம்பெற்றது. இதை எதிர்த்து டாபர் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இவ்வாறு விளம்பரம் செய்வது, 'சந்தையில் உள்ள பாரம்பரியமான ச்யவன்பிராஷ் தயாரிப்புகள் அனைத்தையும், பொதுவாகவும் தொழில் ரீதியிலும் அவமதித்து விட்டது' என்று அதில் குற்றஞ்சாட்டியது. ஏமாற்று வேலை என்ற வார்த்தை, பேச்சுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்று பதஞ்சலி தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால் விளம்பரத்தை வெளியிடக்கூடாது என்றும், ஏற்கனவே வெளியான விளம்பரத்தை, 'டிவி' சேனல்கள், ஓ.டி.டி., தளங்கள், டிஜிட்டல் தளங்கள் உட்பட அனைத்து எலக்ட்ரானிக் தளங்களில் இருந்தும், மூன்று நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நீக்கிவிட்டு விளம்பரத்தை ஒளிபரப்பலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது. இவ்வழக்கு, பிப்ரவரி 26 அன்று மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.