தனியார் துறை மூலதன செலவினம் கடும் சரிவு
மும்பை; கடந்த நிதியாண்டில், நாட்டின் தனியார் துறையின் மூலதன செலவின பங்களிப்பு, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 33 சதவீதமாக குறைந்துள்ளதாக, தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, நாட்டில் மேற்கொள்ளப்படும் மூலதன செலவினத்தின் பெரும்பகுதியை, மத்திய அரசே மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனியார் நிறுவனங்கள் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முதலீடு செய்யாமல், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து இக்ரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளில், தனியார் துறை நிறுவனங்களின் மூலதன செலவின பங்களிப்பு, 33 சதவீதமாக குறைந்துள்ளது. பங்கு சந்தையில் பட்டி யலிடப்பட்ட தனியார் நிறுவனங்களின் மூலதன செலவினம் 12 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், பட்டியலிடப்படாத நிறுவனங்களின் முதலீடு குறைந்துள்ளது. கொரோனாவுக்கு பின், தற்போது நிறுவனங்களின் வருவாய் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. குறைந்து வரும் கடன், அதிகரிக்கும் வருவாய் ஆகியவற்றோடு சேர்த்து, ரெப்போ வட்டி குறைப்பு, வருமான வரி விலக்கு உள்ளிட்டவை காரணமாக, வரும் ஆண்டுகளில் தனியார் துறையின் மூலதன செலவினம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணங்கள்
வலுவற்ற உள்நாட்டு நுகர்வு ஏற்றுமதியில் பெரிய முன்னேற்றம் இல்லாதது குறைந்த விலையிலான சீன இறக்குமதிகள் அதிகரிப்பு.