உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கோத்தாரி நிறுவன பங்குகளை கத்தார் நிறுவனம் வாங்குகிறது

கோத்தாரி நிறுவன பங்குகளை கத்தார் நிறுவனம் வாங்குகிறது

சென்னை:சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, 'கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை, கத்தாரை சேர்ந்த, அந்நாட்டின் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான 'கே.எப்.குளோபல் அண்டுஇன்வெஸ்ட்மென்ட்' நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.உரம், உணவு, மின்னணு தீர்வுகள், ஆரோக்யம், சுரங்கம், டிரோன், காலணி என பல்வேறு துறைகளை சேர்ந்த வணிகத்தில், கோத்தாரி நிறுவனமான கே.ஐ.சி.எல்., ஈடுபட்டு வருகிறது. 125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை, அதாவது 70.56 லட்சம் பங்குகளை வாங்க, கே.எப்.குளோபல் அண்டு இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.இதற்கான ஒப்புதலை, கே.ஐ.சி.எல்., இயக்குனர் குழு ஏற்கனவே அளித்துள்ளது. கத்தாரின் முன்னாள் அமைச்சரும், தோஹா வங்கி மற்றும் கத்தார் ஏர்வேஸ் நிறுவன நிறுவனருமான பலாஹ் ஜஸ்ஸிம் ஜே.எம். அல் தானிக்கு சொந்தமான நிறுவனம் கே.எப்.குளோபல். கத்தாரில் கே.எப்.குளோபலுடன் இணைந்து புதிய நிறுவனத்தை துவங்கவும் கோத்தாரியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.புதிய நிறுவனத்தில் கோத்தாரியின் பங்கு 70 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 'பீனிக்ஸ் கோத்தாரி புட்வேர்' நிறுவனம், பெரம்பலுாரில், தன் முதலாவது, தோல் அல்லாத காலணி தயாரிப்பு நிறுவனத்தை அமைத்து வருகிறது. கத்தார் மன்னர் குடும்ப நிறுவனத்தின் புதிய முதலீடு, தங்கள் வர்த்தக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என இந்நிறுவனம் கருதுகிறது.தவிர, கோத்தாரி நிறுவனம் சென்னையில் தனது முதலாவது 'கிக்கர்ஸ்' பிராண்டு காலணி ஷோரூமை இன்று திறக்கவுள்ளது. பிரான்சின் 'ராயர்' குழுமத்துடன் 30 ஆண்டுகால உரிமம் பெற்று, கிக்கர்ஸ் பிராண்டு காலணிகளை இந்தியாவில் கோத்தாரி நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது.மேலும், இலங்கை, மாலத்தீவு, பூடான், நேபாளம், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் கிக்கர்ஸ் காலணி விற்பனைக்கும் இந்த உரிமம் செல்லத்தக்கதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.• கோத்தாரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் கைமாறுகிறது• 'கிக்கர்ஸ்' காலணி ஷோ ரூமை கோத்தாரி சென்னையில் துவக்குகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை