வழக்கம்போல் வேலை செய்தால் 30 சதவிகிதம் வருவாய் இழக்க நேரிடும் ஐ.டி., நிறுவனங்களை எச்சரிக்கும் அறிக்கை
புதுடில்லி:புதிய தொழில்நுட்ப மாற்றங்களை கையாளாமல், வழக்கமான பாணியில் இயங்கிவந்தால் தொழில் நுட்ப நிறுவனங்கள் 30 சதவீத வருவாயை இழக்க நேரிடும் என்று, மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெய்ன் அண்டு கோ எச்சரித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான புதிய வளர்ச்சி வாய்ப்புகள் என்ற பெயரில் அந்நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு ஒரு சவால்தான். ஆனால், அதுதவிர மற்ற சவால்களும் உள்ளன. தொழிலை எவ்வித மாற்றமும் இல்லாமல் 'வழக்கம் போல்' செய்து கொண்டிருந்தால் அந்நிறுவனங்களின் வருவாயில் 30 சதவீதம் காணாமல் போய்விடும். கூடுதலாக ஒப்பந்தங்களைப் பெறும்போது 5 - 7 புள்ளிகள் அளவுக்கு லாப விகிதத்தை விட்டுத்தரவும் வேண்டியிருக்கும். இதன் விளைவாக அடுத்த 5 ஆண்டுகளில் நிறுவனங்களின் மொத்த மதிப்பில் 45 - 50 சதவீதம் குறைந்துவிடும். செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளாதாரம் தற்போது தரவு செயல்பாடுகள், நவீனமயம், சிப் வடிவமைப்பு போன்ற புதிய வாய்ப்புகள் உருவாக்கத்தின் வாயிலாக ஒட்டுமொத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.