தமிழகத்தில் அரிசி விலை கிலோ ரூ.4 வரை உயரக்கூடும்; வெளிமாநிலங்களில் நெல் கொள்முதல் விலை உயர்வு
கரூர்: வெளி மாநிலங்களில் நெல் கொள்முதல் விலை உயர்வு காரணமாக, தமிழகத்தில் அரிசி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், நெல் அறுவடை குறுவை, சம்பா என இரண்டு போகங்களாக நடக்கிறது. இங்கு சராசரியாக, 70 லட்சம் டன் அரிசி உற்பத்தியாகிறது. ஆனால், தமிழகத்திக்கு 91 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதனால், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி விற்பனைக்கு வருகிறது. இது மட்டுமின்றி சன்ன ரகமான உயர் ரக பொன்னி அரிசியை தினமும் உட்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை, சென்னை மட்டுமின்றி பிற நகரங்களிலும் அதிகரித்துள்ளது. சாதாரண குண்டு ரக அரிசியை பயன்படுத்துவது குறைந்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன மாநில இணை செயலர் வெங்கட்ராமன் கூறியதாவது: கர்நாடகாவில் கடந்த ஆண்டு முதல் பருவத்தில் நெல் விலை வீழ்ச்சியடைந்ததால், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால், இரண்டாம் பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கு சென்று விட்டனர். இதனால் நெல் விளைச்சல் குறைந்து வரத்து குறையும் என்பதால், அங்கு கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.ஆந்திராவிலும் நெல் மகசூல் குறைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு தடையை நீக்கியதன் காரணமாக, வெளிநாடுகளுக்கு நெல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் நெல் கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. தற்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல், 15 நாட்களில் அரவைக்கு வந்துவிடும். கொள்முதல் விலை அதிகரிப்பால், அரிசி விலை கிலோவுக்கு 2 முதல் 4 ரூபாய் விலை உயர வாய்ப்புள்ளது. நெல் கொள்முதல் மட்டுமின்றி, போக்குவரத்து கட்டணம், தொழிலாளர் ஊதியம், அரவை ஆலைகளை இயக்க தேவைப்படும் செலவு, வரிகள் என பல அம்சங்கள் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.