இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்குகிறது சாம்சங்
புதுடில்லி:சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி பிரிவுகளை விரிவுபடுத்தி வருவதாக மத்திய மின்னணுவியல் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். ஆப்பிள் நிறுவனத்துக்கு அடுத்து, இந்தியாவிலிருந்து அதிகளவிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக சாம்சங் திகழ்கிறது. இதுமட்டுமல்லாமல், உலகளவில் தன் இரண்டாவது பெரிய உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைத்துள்ளது. அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் லேப்டாப் உற்பத்தி செய்யவும் நிறுவனம் தயாராகி வருவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.எம்., ரோ நடப்பாண்டு துவக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியாவுக்கான தலைவர் ஜே.பி.,பார்க் மற்றும் துணைத்தலைவர் எஸ்.பி., சுன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், “சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கான உற்பத்தி கட்டமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. “நம் நாட்டில் உள்ள சாம்சங் ஆராய்ச்சி மையங்களில் 7,000க்கும் அதிகமான பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்,” என தெரிவித்துள்ளார்.