உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  மூலதன செலவுக்கான சிறப்பு கடன் மாநிலங்களுக்கு ரூ.61,000 கோடி

 மூலதன செலவுக்கான சிறப்பு கடன் மாநிலங்களுக்கு ரூ.61,000 கோடி

புதுடில்லி: மத்திய அரசு, மூலதன செலவுக்கான சிறப்பு கடன் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு கடந்த 15ம் தேதி வரை 61,000 கோடி ரூபாய் விடுவித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், கடந்த நவம்பர் மாத நிலவரப்படி தமிழகத்துக்கு 2,765 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக பார்லிமென்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஏ.எஸ்.சி.ஐ., எனும் இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 1.50 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், இலக்கு எட்டப் படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டிருந்ததாகவும், எனினும் மார்ச் முடிவில் இது 1.49 லட்சம் கோடி ரூபாயை எட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மாநிலங்களின் மூலதன செலவினத்தை அதிகரிக்க, 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன் வழங்கும் இத்திட்டம், கடந்த 2020 - 21 நிதியாண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு உருவாக்கம், உட்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவையே இதன் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் கீழ் இரண்டு விதமாக நிதி விடுவிக்கப்படுகிறது. ஒன்று, மாநிலங்களின் முன்னுரிமை திட்டங்களுக்கான நிதி. இதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. மற்றொன்று நிபந்தனைக்கு உட்பட்ட நிதி. கட்டட விதிகளில் நவீன மாற்றம், நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல், பழைய அரசு வாகனங்களை அழித்தல் மற்றும் நிதி மேலாண்மை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளும்பட்சத்தில் இது வழங்கப்படும். மூலதன செலவு கடன் திட்டத்தில் கடந்த நவ., வரை தமிழகத்துக்கு 2,765 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை