உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் சர்சார்ஜ் கட்டணம் அதிகரிப்பு

வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் சர்சார்ஜ் கட்டணம் அதிகரிப்பு

சென்னை:மின்சார சந்தை மற்றும் மூன்றாம் நபரிடம் இருந்து, தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு, 54 காசு கூடுதல் சர்சார்ஜ் விதித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நுாற்பாலை, ஜவுளி, வாகன உற்பத்தி ஆலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவில் இடம்பெறும் பெரிய தொழில் நிறுவனங்கள், மின் வாரியத்திடம் இருந்து மட்டும் மின்சாரம் வாங்குவதில்லை. மின்சார சந்தை, வெளிச்சந்தையில் மூன்றாம் நபர்களிடம் இருந்தும் மின்சாரம் வாங்குகின்றன.இந்த மின்சாரத்தை எடுத்து வருவதற்கு, மின் வாரியத்தின் வழித்தடம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, 'வீலிங் சார்ஜ், சர்சார்ஜ்' உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துகின்றன. அதன்படி, சர்சார்ஜ் கட்டணம் யூனிட்டுக்கு, 1.92 ரூபாயாக உள்ளது. அதனுடன் சேர்த்து இம்மாதம், 12 முதல், 2025 மார்ச் வரை யூனிட்டிற்கு, 54 காசு கூடுதல் சர்சார்ஜ் வசூலிக்க, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, தொழில் துறையினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:கூடுதல் சர்சார்ஜ், இம்மாதம் 12ம் தேதி முதல் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கூடுதல் சர்சார்ஜ் நிர்ணயம் செய்வதற்கான நடைமுறை, மின்சார தீர்ப்பாயத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு இருந்தாலும், அதில் உள்ள பல்வேறு விஷயங்களை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை. இது சம்பந்தமாக ஆலோசனை கேட்கப்பட்டிருந்த நிலையில், உரிய முறையில் கருத்து தெரிவிக்கப்பட்டது; அக்கருத்துக்களை ஆணையம் நிராகரிக்கவும் இல்லை. மேலும், பசுமை மின்சாரத்திற்கு கூடுதல் சர்சார்ஜ் விதிக்கப்பட கூடாது என, மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் உள்ளன. அதையும் கருத்தில் கொள்ளாமல், ஒட்டுமொத்த மின்சார சந்தையில் வாங்கப்படும் மின்சாரத்திற்கும், மூன்றாம் நபர் வாயிலாக வாங்கப்படும் பசுமை மின்சாரமாக இருந்தாலும், கூடுதல் சர்சார்ஜ் சேர்த்து நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க, எங்களது சங்கம் தீர்மானம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.• பெரிய தொழில் நிறுவனங்கள், மின் வாரியத்திடம் இருந்து மட்டுமின்றி; மின்சார சந்தை, மூன்றாம் நபர்களிடம் இருந்தும் மின்சாரம் வாங்குகின்றன• தற்போது இதற்கான சர்சார்ஜ் யூனிட்டுக்கு, 1.92 ரூபாயாக உள்ள நிலையில் மேலும் 54 காசு அதிகரிப்பு • தொழில்துறையினர் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை