உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவில் ரூ.70,000 கோடி முதலீடு செய்யப்படும் சுசூகி தலைவர் தோஷிஹிரோ அறிவிப்பு

இந்தியாவில் ரூ.70,000 கோடி முதலீடு செய்யப்படும் சுசூகி தலைவர் தோஷிஹிரோ அறிவிப்பு

ஹன்சல்பூர்:ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பாளரான சுசூகி மோட்டார் கார்ப்பரேசன் நிறுவனம், அடுத்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவில் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என, நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் 'இ விட்டாரா' அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், “சுசூகி நிறுவனம், அடுத்த ஐந்து, ஆறு ஆண்டுகளில், இந்தியாவில் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் போக்குவரத்து துறையில், சுசூகி முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவின் பசுமை போக்குவரத்து இலக்கை அடையவும், வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகவும் நிறுவனம் உறுதுணையாக இருக்கும்,” என தெரிவித்தார். சுசூகி குழுமம் இந்தியாவில் ஏற்கனவே ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் வாயிலாக 11 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 70,000 கோடி ரூபாய் முதலீடு, நிறுவனத்தின் உற்பத்தி திறன் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் என, மாருதி சுசூகி இந்தியா தலைவர் ஆர்.சி., பார்கவா தெரிவித்துள்ளார். 'இதுதான் சுதேசி' முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார கார் 'இ விட்டாரா' அறிமுக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: சுதேசி என்பதே அனைவரது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். எந்த நாட்டில் இருந்து முதலீடு மேற்கொண்டாலும், உற்பத்தி செய்வதும், உழைப்பதும் இந்தியராக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இதுவே சுதேசி. அந்த வகையில் மாருதி சுசூகியும் ஒரு சுதேசி நிறுவனம் தான். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுசூகியின் மின்சார கார்கள் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இது மேக் இந்தியா திட்டத்துக்கு பெருமையான தருணம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை