செமி கண்டக்டர் துறையில் முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு! துவங்கியது செமி கண்டக்டர் இயக்கம் - 2030
சென்னை: தமிழகத்தில், 'செமி கண்டக்டர்' வடிவமைப்பு, உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கிய தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 'செமி கண்டக்டர் இயக்கம் - 2030' திட்டத்திற்கு, 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.மாநில அரசு, 'தமிழக செமிகண்டக்டர் இயக்கம் - 2030' எனும் ஐந்து ஆண்டு விரிவான திட்டத்தை, கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்காக தற்போது 500 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையை தொழில் துறை பிறப்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் செமி கண்டக்டர் வடிவமைப்பு, சோதனை மற்றும் பேக்கேஜிங் மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்வதும் ஊக்குவிக்கப்படும். * கோவை மாவட்டம், சூலுார், பல்லடத்தில் தலா, 100 ஏக்கரில் தொழில் பூங்கா* சர்க்யூட்ஸ், சிப்செட்ஸ், சிப்ஸ், ஐ.பி.கோர் வடிவமைப்பு நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை * வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் தயாரிப்புகளை கொண்ட நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் * ஒரு ஊழியருக்கு மாதத்திற்கு, 20,000 ரூபாயாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.
தமிழக அரசின் முயற்சிகள்
செமிகண்டக்டர் வடிவமைப்புக்கு காப்புரிமை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருடன், அரசு இணைந்து செயல்படும். தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செமிகண்டர்களை, பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவ, செமி கண்டக்டர் துறையில் அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களை கொண்ட வழிகாட்டி குழுவை, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் அமைக்கும். இந்த சலுகைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருந்தும்.