தமிழக ஆயத்த ஆடை ஏற்றுமதி வருவாய் 10% அதிகரிக்கும்: கிரிசில் ரேட்டிங் நிறுவனம் கணிப்பு
மும்பை:நடப்பு நிதியாண்டில், தமிழக ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களின் வருவாய், 10 சதவீத வளர்ச்சியை எட்டும் என, தரஆய்வு நிறுவனமான 'கிரிசில்' தெரிவித்து உள்ளது.அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சீரான அளவில் தொடரும் ஆர்டர்கள், ஆயத்த ஆடைகளுக்கு அதிகரித்துள்ள தேவை ஆகிய காரணங்களால், நடப்பு நிதியாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களின் வருவாய் 43,000 கோடி ரூபாயை எட்ட வாய்ப்புள்ளது. இது, 8 முதல் 10 சதவீத வருவாய் வளர்ச்சியாகும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவை குறைந்ததும், ஆர்டர்கள் கிடைப்பதில் மந்தநிலையும் நிலவியது. நடப்பு நிதியாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமான வளர்ச்சியை கண்டு வருகிறது. தேசிய அளவில் அதன் வளர்ச்சி, 3 முதல் 5 சதவீதம் வரை இருக்கும்.இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், தமிழகம் 30 சதவீத பங்கு வகிக்கிறது. ஏற்றுமதி அளவு அடிப்படையில் தமிழக ஏற்றுமதி, 6 முதல் 7 சதவீத வளர்ச்சியை எட்ட வாய்ப்புஉள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஆயத்த ஆடைகளுக்கு தேவை அதிகரித்துஉள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழக ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சியில் திருப்பூர் பின்னலாடைத் தொழில் பெரிதும் கைகொடுக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் ஜவுளி உற்பத்திக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை ஆயத்த ஆடைகளுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அந்த துறைக்கு மட்டுமின்றி ஏற்றுமதியாளர்களுக்கும் உதவும் என, கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவன இயக்குனர் ஜெயஸ்ரீ நந்தகுமார் தெரிவித்தார்.