அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த டாடா குழும நிர்வாகிகள்
புதுடில்லி:டாடா குழுமத்துக்குள் நிலவும் உட்பூசல்கள் தணிக்க, மத்திய அரசு தலையிட உள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியான நிலையில், டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, துணை தலைவர் வேணு சீனிவாசன், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் நேற்றிரவு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர். டாடா குழுமத்தின் முக்கிய பங்குதாரரான டாடா டிரஸ்ட்சுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது, டாடா குழும நிறுவனங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம் என்பதால், இக்குழுமத்தின் தலைவர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு சிக்கல் வராமல் தடுக்க, டாடா டிரஸ்ட்சில் உள்ள அறங்காவலர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்வதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், அமித் ஷா இல்லத்தில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது. என்ன பிரச்னை? டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு நியமன இயக்குநர்கள் நியமிப்பது மற்றும் இயக்குநர் குழு கூட்டங்களில் விவாதிக்கப்படும் விவகாரங்கள் குறித்து தகவல்கள் பரிமாறிக்கொள்வது தொடர்பாக, டாடா டிரஸ்ட்ஸ் அறங்காவலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முன்னாள் ராணுவ அமைச்சக செயலர் விஜய் சிங் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், இந்த பிரச்னை மேலும் தீவிரமடைந்து உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த 2022 செப்டம்பரில் டாடா சன்ஸ் நிறுவனத்தை உயர்மட்ட வங்கிசாரா நிதிநிறுவனமாக அறிவித்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பட்டியலிடப்பட வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.